பிரபல திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான பிறைசூடன் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 65.
1985-ல் வெளியான ‘சிறை’ படத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த ‘ராசாத்தி ரோசாப்பூ’ என்னும் பாடலை எழுதியதன் மூலமாக தமிழ்த்திரையுலகில் பாடலாசிரியராக தனது பயணத்தை தொடங்கினார்.
கவிஞர், நடிகர், வசனகர்த்தா, ஆன்மிகவாதி எனப் பன்முகப் பரிமாணங்கள் கொண்ட பிறைசூடன் திரைப்பட எழுத்தாளர் சங்க செயலாளராக பதவி வகித்துள்ளார். 1991, 1996 ஆகிய ஆண்டுகளில் தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருது, தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் கலைச்செல்வம் விருது, 2015ல் தமிழக அரசின் கபிலர் விருது பெற்றிருக்கிறார்.
35 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழில் பல முக்கியமான பங்களிப்புகளை வழங்கிய பிறைசூடன் ஆஸ்கர் விருதுக்கு இந்தியப் படங்களைப் பரிந்துரைக்கும் குழுவில் சமீபத்தில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
நெசப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் பிறைசூடன் நேற்று காலமானார். மாரடைப்பு காரணமாக அவர் இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது மறைவு செய்தி வெளியானதையடுத்து திரையுலகத்தினர் மற்றும் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கவிஞர் பிறைசூடன் அவர்களின் இல்லத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.