ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவுகள் பேரழிவை ஏற்படுத்தின, குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் வீடுகளும் சேதமடைந்தன.
இந்த நிலச்சரிவால் ஏற்பட்ட பெரும் பாதிப்பை அடுத்து மாநிலத்தின் முக்கியமான தேசிய நெடுஞ்சாலையான ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

ராம்பனின் தரம்குண்ட் பகுதியில் உள்ள பாக்னாவில் ஏற்பட்ட மேக வெடிப்பின் தாக்கத்தில் வீடு இடிந்து விழுந்ததில் இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பேர் இறந்ததை உறுதிப்படுத்திய அதிகாரிகள், திடீர் வெள்ளம் மற்றும் மண் சரிவுகளில் சிக்கிய நூற்றுக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மாவட்டம் முழுவதும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டதாக தெரிவித்தனர்.
பலத்த மழையால் ஏற்பட்ட பல நிலச்சரிவுகள் காரணமாக ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை (NH44) ஐந்து இடங்களில் தடைபட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். நெடுஞ்சாலையின் பனிஹால்-ராம்பன் பகுதியில் நூற்றுக்கணக்கான பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் சிக்கித் தவித்துள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
இரண்டு ஹோட்டல்கள், பல கடைகள், சில குடியிருப்பு வீடுகள் மற்றும் ஒரு சில வாகனங்கள் சேதமடைந்ததாக ராம்பன் எஸ்எஸ்பி குல்பீர் சிங் தெரிவித்தார்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, ஆலங்கட்டி மழை மற்றும் பேரழிவு தரும் மேக வெடிப்புடன் கூடிய பலத்த மழை பெய்ததைத் தொடர்ந்து நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் விரைவில் தொடங்கப்பட்டதாக துணை ஆணையர் பசீர்-உல்-ஹக் சவுத்ரி தெரிவித்தார்.