சென்னை: சாமானிய மக்களின் வாழ்வாதாரத்துக்கு பக்கபலமாக இருந்து வரும் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே வருகிறது. இது மக்களுக்கு எட்டாக்கனியாக மாறும் நாள் அதிக தூரத்தில் இல்லை என்பது தெரிய வருகிறது. இன்று ஒரே நாளில்,  சரவனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் விலை ரூ.77ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இது குடும்ப தலைவிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை  இன்று (சனிக்கிழமை)  அதிரடியாக பவுனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.76.960-க்கு விற்பனையாகி வருகிறது. இந்த  வரலாறு காணாத விலை உயர்வு பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய பெண்களிடையே ஆர்வமும்,  பெரும் வரவேற்பும் பெற்றுள்ள தங்கத்தின் விலை சர்வதேச வணிகத்தை பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது. இந்திய மிடில் கிளாஸ் குடும்பங்களில் தங்கம் அவசர காலத்திற்கு பணமாக்குவதற்கான ஒரு பொருளாக பயன்படுத்தப்படுகிறது.  அந்த வகையில் இந்திய குடும்பங்களில் முதலீடு, சேமிப்பு என்றவுடன் அனைவரின் நினைவுக்கும் வருவது தங்கம் தான். இந்த தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உய்ர்ந்து வருவது சாமானிய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தங்கத்தின் விலை உயர்வு காரணமாக உலக நாடுகளின் பொருளாதார ஏற்ற இறக்கம் பார்க்கப்படுகிறது. குறிப்பாக,  அமெரிக்கப் பொருளாதாரத்திற்கும் தங்கத்திற்கும் இடையிலான தொடர்பு  மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.  அமெரிக்கா டாலரின் மதிப்பு உயர்வு, இந்திய  நாணயத்தின்மீதான மதிப்பு குறைவு போன்றவை தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கத்தை நிர்ணயிக்கின்றன.

இதற்கிடையில், அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்ற பிறகு, தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே வருகிறது.  டிரம்பின்  பொருளாதார நடவடிக்கை காரணமாக தங்கத்தின் விலை விண்ணை தொடும் அளவுக்கு   உயர்ந்துகொண்டே வருகின்றது. இதுமட்டுமின்றி,   ரஷ்யா உக்ரைன் போர்,  அமெரிக்க – சீனப் வர்த்தகப்போரின் பதட்டம்  மற்றும் இந்தியா அமெரிக்கா இடையேயான வரி பிரச்சினை போன்றவை காரணமாக தங்கத்தின் விலை நாளுக்கு உயர்ந்துகொண்டே இருக்கிறது.

 இந்தியாவில் தங்கத்தின் விலை  தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இன்று மேலும் அதிகரித்துள்ளது.  ஆகஸ்டு மாதம்  ஆக. 6 -ஆம் தேதி வரலாற்றில் முதல்முறையாக தங்கம் விலை பவுனுக்கு ரூ.75,000-ஐ தாண்டியது. தொடா்ந்து  விலை உயர்ந்துகொண்டே வருகிறது. ஆக. 8-இல் பவுன் ரூ.75,760-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை எட்டியது. இந்த நிலையில், தங்கம் விலை தொடா்ந்து 10 நாள்களுக்கும் மேலாக  சற்று குறைந்து கொண்டே வந்தது.  இதனால் தங்கத்தின் விலை குறைந்து ரூ.70ஆயிரத்துக்கு வரும் என மக்கள் எதிர்பார்த்த நிலையில்,   கடந்த வாரம் முதல் தங்கத்தின் விலை மீண்டும் படிப்படியாக உயரத் தொடங்கியது.

ஆகஸ்டு  26ந்தேதி அன்று பவுனுக்கு ரூ.400 உயா்ந்து ரூ.74,840-க்கும், ஆகஸ்டு 27ந்தேதி பவுனுக்கு  ரூ.280 உயா்ந்து ரூ.75,120 இருந்த நிலையில்,  நேற்று முன்தினம் (ஆக. 28ந்தேததி)  பவுனுக்கு ரூ.120 உயா்ந்து ரூ.75,240-க்கும் விற்பனையானது. தொடா்ந்து  நேற்று (வெள்ளிக்கிழமை)  தங்கத்தின் விலை காலை மாலை என ஒரே நாளில் 2 முறை உயா்ந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.130 உயா்ந்து ரூ.9,535-க்கும், பவுனுக்கு ரூ.1,040 உயா்ந்து ரூ.76,280-க்கும் விற்பனையாகி புதிய உச்சத்தைத் தொட்டது.

இந்த நிலையில், சனிக்கிழமை (இன்று)  தங்கத்தின் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.76,960-க்கு விற்பனையாகி எட்டாக்கனியாக மாறி உள்ளது.  அதாவது சவரன் தங்கம் கிராமுக்கு  ரூ.85 உயர்ந்து ரூ.9,620-க்கும், பவுனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.76,960-க்கு விற்பனையாகிறது.

இதேபோல் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.3 உயா்ந்து ரூ.134-க்கும், கிலோவுக்கு ரூ.3,000 உயா்ந்து ரூ.1.34 லட்சத்துக்கும் விற்பனையானது.

இந்தியா மீதான அமெரிக்க அரசின் கூடுதல் வரி விதிப்பால், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளதே உள்நாட்டில் தங்கத்தின் விலை திடீா் உயா்வுக்குக் காரணம் என கூறப்படுகிறது.