டெல்லி: நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு இருக்கிறது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,000-ஐ தாண்டியுள்ளது. தொடர்ந்து பாதிப்பின் சதவீதம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
ஆகையால் நேற்றுடன் முடிவதாக இருந்த முழு ஊரடங்கு வரும் 3ம் தேதிக்கு வரை நீட்டித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஏப்ரல் 20 வரை தீவிர கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும், அதன் பிறகு நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
இந் நிலையில் ஊரடங்கின் போது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி என்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்று விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக சமூக விலகலை உணர்த்தும் வகையில் பொது போக்குவரத்து சேவைகள், கல்வி நிலையங்கள், பயிற்சி மையங்கள், மால்கள், வணிக வளாகங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர அனைத்து வழிபாடு தலங்களில் பொதுமக்கள் அனுமதிக்கக் கூடாது. திருவிழாக்கள் நடத்தக்கூடாது, சிறப்பு அனுமதி பெற்றப்பட்ட நிறுவனங்களை தவிர்த்து, பிற தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று நாடுமுழுவதும் மதுக்கடைகளை திறக்க அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த மாநிலம் மதுக்கடைகளை திறக்க அனுமதி கொடுத்து இருந்தாலும் உடனடியாக மூட வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.