குன்னூர்

குன்னூர் நகரில் ஓடும் குன்னூர் நதி சுத்திகரிக்கப்பட்டு மற்ற இந்திய நகரங்களுக்கு ஒரு முன்னுதாரணம் ஆகி உள்ளது.

தமிழகத்தில் உள்ள நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிறு நகரம் குன்னூர் ஆகும்.  இந்த நகரில் 45,494 பேர் வசித்து வருகின்றனர்.  குன்னூர் நதி இந்த நகரில் உள்ள பஜார் மலை மற்றும் மிஷன் மலைகளுக்கிடையில் ஓடுகிறது.    இந்தியாவில் உள்ள மற்ற நதிகளைப் போல் இந்த நதியிலும் கழிவு நீர் இணைக்கப்பட்டு நதி பாழாகி உள்ளது.   ஆங்கிலேயர் காலத்தில் பலரும் பயன்படுத்திய இந்த குன்னூர் நதி 60 வருடங்களில் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையை அடைந்துள்ளது.

குன்னூர் நகருக்கு ராலியா அணை மற்றும் குன்னூர் நதியில் கிளை நதிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டாலும் கடும் குடிநீர் பஞ்சம் நிலவி வருகிறது.  ஒரு தன்னார்வு தொண்டு நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பின்படி குன்னூர் நதி அந்நகரின் குடிநீர் பஞ்சத்தைப் போக்கும் வல்லமை உடையது எனவும் கழிவு நீர் இணைப்பால் நதி பாழாகி குடிநீர்ப் பஞ்சம் தலைவிரித்து ஆடுவதும் தெரிய வந்துள்ளது.

இந்தப் பகுதிகளில் வருடம் முழுவதும் மழை பெய்ய வாய்ப்புள்ளதால் குன்னூர் நதியில் நல்ல நீர் ஓட வாய்ப்புள்ளது.   இந்த பகுதிக்கு அருகில் உள்ள அவலாஞ்சியில் இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் கடந்த 76 வருடங்களில் இல்லாத அளவுக்கு மழை இருந்தது குறிப்பிடத்தக்கது.    ஆயினும் இந்த நதியைச் சுத்திகரிக்க யாரும் முன்வராமல் உள்ளனர்.

இதையொட்டி சுத்தமான குனூர் என்னும் அமைப்பு இதற்கு முடிவு கட்ட முன்வந்தது.  கடந்த ஜூன் மாதம் இந்த நதியை தூர் வாரும் பணி நடந்தது.  அதற்கு முன்பு இந்த அமைப்பு பாலங்களைச் சுத்தம் செய்து கரைகளில் புல்வெளிகளை உருவாக்கி இருந்தது.  ஏற்கனவே கடும் வெள்ளத்தினால் ஆற்றில் இருந்த அனைத்துக் கழிவுகளும் அடித்துச் சென்றபடியால் மேற்கொண்டு கழிவுகள் சேராமல் தடுக்கப்பட்டது.

அத்துடன் நகராட்சி கழிவறை, வீடுகள் உள்ளிட்ட பல ஆக்கிரமிப்புக்களும் அகற்றப்பட்டது.    இதற்கு இந்த அமைப்பு ரூ. 15 லட்சம் செலவு செய்தது.  இதற்கான நிதி உதவியை ஐதராபாத்தைச் சேர்ந்த ஒரு ஆர்வலர் அளித்துள்ளார்.  சுமார் 42 நாட்கள் கடும் உழைப்பில் 12 டன்கள் எடையுள்ள மணல், பிளாஸ்டிக், கட்டிட  இடிபாடுகள்,  ஒரு ஆட்டோ, இரு சோபாக்கள் ஆற்றில் இருந்து அகற்றப்பட்டன.

ஆற்றில் கலக்கப்படும் கழிவு நீர் வேறு பக்கம் திருப்பப்பட்டது,   இந்த கழிவு நீரைச் சுத்திகரிக்க அரசு ரூ.5 கோடி செலவில் நிலையம் ஒன்றை அமைத்துள்ளது.   அத்துடன் ஆற்றில் குப்பை கொட்டுவது மற்றும் கழிவு நீரை இணைப்பது குற்றமாக்கப்பட்டுள்ளது.    இவ்வாறான நடவடிக்கை எடுப்போரின் வீட்டு மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.

தற்போது இந்த குன்னூர் நதி முழுமையாகச் சுத்தமாகி உள்ளது.  நாட்டின் பல ஆறுகள் குப்பை மற்றும் கழிவுகளால் பாழாகி வரும் நிலையில் இந்த சுத்திகரிப்பு மற்ற நகரங்களுக்கு ஒரு முன்னுதாரணமாக உள்ளதாக குன்னூர் நகர ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.