டெல்லி: 50% மாணாக்கர்களுடன் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் வகுப்புகள் நடத்தலாம் என்று பல்கலைக்கழக மானியக்குழு (University Grants Commission) அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. 50 சதவீத வருகைப்பதிவுடன் வகுப்புகளை நடத்தலாம் என்று அனுமதி வழங்கி உள்ளது.
இந்தியாவில் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த 7 மாதங்களாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளன. பல தேர்வுகள் நடத்தப்படாமலேயே தேர்ச்சிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இறுதி பருவத்தேர்வுகள் மட்டும் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. அதுபோல தனியார் கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் கல்வி போதித்துவருகின்றன.
இதற்கிடையில் மத்தியஅரசு அளிவித்த பொதுமுடக்கம் தளர்வுகள் காரணமாக, செப்டம்பர் மாதம் 21ம் தேதி பள்ளிகளைத் திறக்க மத்திய அரசு அனுமதித்துள்ளது. அத்துடன், பல்வேறு நெறிமுறைகளையும் வெளியிட்டது. அதன்படி, வகுப்பறைகளில் மாணவர்களுக்கு இடையே தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடிக்கவும், கிருமிநாசினி பயன்படுத்துவதையும் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மே லும் மாணவர்கள் முகக்கவசம் அணிந்திருப்பதையும், மடிக்கணினி, நோட்டுப் புத்தகங்கள் போன்றவற்றை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வெளியே செல்ல தன்னார்வ அடிப்படையில் அனுமதிக்க வேண்டும் என்றும், அதற்கு பெற்றோர் அல்லது பாதுகாவலரின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் பெறப்பட வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சில மாநிலங்களில் கல்வி நிறுவனங்கள் குறிப்பிட்ட அளவிலான மாணாக்கர்களைக்கொண்டு செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை 50 சதவீத வருகைப்பதிவுடன் திறக்க பல்கலைக்கழக மானியக்குழு அனுமதி அளித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறப்பது குறித்து, அந்தந்த மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி செயல்பட வேண்டும், அதுமட்டுமின்றி கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வெளியே இருக்கும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மட்டுமே திறக்கலாம் என தெரிவித்துள்ளது. பிற உயர்கல்வி நிறுவனங்கள் மாநில அரசுகளின் ஆலோசனைப்படி வகுப்புகளை மீண்டும் திறப்பது குறித்து முடிவு செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், கல்லூரிகளில் சமூக இடைவெளி, முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட வேண்டும், கல்லூரி விடுதிகள் தவிர்க்க முடியாத கட்டாய சூழலில் மட்டுமே திறக்கப்பட வேண்டும், கொரோனா அறிகுறி உள்ளவர்களை கல்லூரிக்கு வர அனுமதி அளிக்கக் கூடாது, இறுதி ஆண்டு மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் தங்கள் துறை சார்ந்த ஆசிரியர்களை நேரில் வந்து கல்லூரிகளில் சந்திக்கும் போது அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகளையும் அறிவித்து உள்ளது.
மாநிலத்தில் எந்தெந்த பகுதிகளில் கல்லூரிகளை திறக்கலாம் என்பது குறித்து மாநில அரசுகள் அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது.