போபால்:

மத்திய பிரதேசத்தில் தொடக்க பள்ளி ஒன்றில் மாணவ மாணவிகளுக்கு கழிப்பறையில் வைத்து பாடம் நடத்துவது தெரியவந்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்–மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலம் முச் மாவட்டத்தில் இருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மோகாம்புரா என்ற கிராமத்தில் கடந்த 2012-ல் தொடக்க பள்ளி ஒன்று தொடங்கப்பட்டது.

இந்த பள்ளியில் 34 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். பள்ளி ஒரு வருடம் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. தற்போது வாடகை கட்டிடமும் கிடைக்கவில்லை. மாணவ மாணவிகளுக்கு கழிப்பறையில் வைத்து பாடம் நடத்தப்படும் புகைப்படம் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இது குறித்து பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், ‘‘பள்ளிக்கு சொந்தமான கட்டிடம் இல்லாததால் மாணவ மாணவிகள் மரத்தடியில் வைத்து வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இப்போது மழைக்காலம் என்பதால் எல்லா இடங்களிலும் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் பள்ளி வளாகம் அருகே உள்ள கழிப்பறையில் வகுப்பு எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக இதே நிலைமை தான் உள்ளது. உயர் அதிகாரிகளுக்கு இது குறித்து தகவல் தெரிவித்தேன். ஆனால் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என வேதனையுடன் தெரிவித்துள்ளார். இது குறித்து எம்.எல்.ஏ கைலாஷ் சாவ்லா கூறுகையில்,‘‘ எந்த பள்ளியிலும் கழிப்பறையில் வைத்து பாடம் நடத்தும் அவலம் இல்லை’’ என்றார்.

மாவட்ட கல்வித்துறை அதிகாரி சர்மா கூறுகையில், ‘‘பள்ளி நிலைமை குறித்து மாநில கல்வித்துறைக்கு அனுப்பி உள்ளோம். பள்ளி கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கான திட்டத்தை அனுப்பி வைத்துள்ளோம்’’ என்றார்.