நெல்லை: மாணவர்களிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டதன் காரணமாக, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுஉள்ளது.  மறு உத்தரவு வரும் வரை பல்கலைக்கழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அளித்து பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலை பகுதியில்,  நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக வளாகம் உள்ளது.  இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு மோட்டார் சைக்கிள்களில் வரும் மாணவர்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்காக பல்கலைக்கழகம் நுழைவாயில் அருகில் அனைத்து வாகனங்களுக்கும் பார்க்கிங் வசதி உள்ளது. சில மாணவர்கள் இதில் நிறுத்தாமல் வேறு இடத்தில் நிறுத்தி உள்ளனர். இதனால்  தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

விசாரணையில்,  பல்கலைக்கழகத்தின் வாகன நிறுத்தும் இடம் குத்தகை எடுத்துள்ளவருக்கும், வாகனத்தை பார்க்கிங்கில் நிறுத்தாமல் வேறு இடத்தில் நிறுத்தியதால் தகராறு ஏற்பட்டுள்ளது.    இந்த பல்கலைக்கழகத்தில், வரலாற்று துறையில் முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவரான தச்சநல்லூர் அடுத்த மணி மூர்த்தீஸ்வரம் வாழ வந்த அம்மன் கோவில் தெருவை சேர்ந்த லட்சுமி நாராயணன் (வயது 18) என்பவர்,  பார்க்கிங் கட்டணம் செலுத்துவதை தவிர்த்து, தனது இரு சக்கர வாகனத்தை,  வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தாமல் கேண்டீன் அருகே எடுத்து சென்றுள்ளார்.

அப்போது வரலாற்றுத்துறை இரண்டாம் ஆண்டு மாணவர் அருள் முத்துசெல்வன், பல்கலைக்கழக வளாகத்திற்குள் இப்படி மோட்டார் சைக்கிளில் செல்லக்கூடாது என்று கூறியுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து இருவரும் இரண்டு கோஷ்டிகளாக பிரிந்து மோதிக் கொண்டனர். இதில் லட்சுமி நாராயணன், அருள் முத்துசெல்வன் ஆகியோர் காயம் அடைந்த நிலையில் இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இந்த சம்பவம் குறித்து பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கோஷ்டி மோதலில் ஈடுபட்டதாக 3 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

இதனால் மாணவர்கள் மத்தியில் சலசலப்பு எழுந்துள்ளது. இந்த மோதல் விவகாரம் வேறு எந்தவொரு பிரச்சினையும் எழாத வகையில்,   மறு உத்தரவு வரும் வரை பல்கலைக்கழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அளித்து மனோன்மணியம்  பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனால் பல்கலைக்கழகம் மூடப்பட்டது.