சென்னை
செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்புவதால் சென்னையில் வெள்ளம் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.
சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் கடும் மழை பெய்து வருகிறது. சென்னைக்குக் குடிநீர் வழங்கும் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. குறிப்பாக செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னையில் கடும் வெள்ளம் ஏற்பட்டதால் மக்கள் மிகுந்த பயத்துடன் உள்ளனர்.
தமிழ்நாடு வெதர்மேன் என அழைக்கப்படும் பிரதீப் ஜான் தனது முகநூல் பதிவில், “செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது. தற்போது ஏரி நிரம்ப இன்னும் 1 டிஎம்சி நீர் மட்டுமே தேவைப்படுகிறது. இன்னும் இரு தினங்கள் வரை இந்த நிகழ்வு ஏற்படாது என்பதால் தற்போது வெள்ளம் குறித்த அச்சம் தேவை இல்லை.
இதற்கு முன்பும் பலமுறை செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பித் திறக்கப்பட்ட போதும் வெள்ளம் ஏற்பட்டது இல்லை. அடையாறு நதியில் அதிக பட்ச வெள்ள அளவுக்கு குறைவாக நீர் செல்லும் போது நகரில் வெள்ளம் ஏற்படாது. அந்த அளவை தாண்டும் போது மட்டுமே வெள்ளம் ஏற்படும். எனவே மக்கள் எனது வார்த்தை மேல் நம்பிக்கை வைத்து அச்சம் கொள்ள வேண்டாம்.
2015 ஆம் வருடம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட அபாயங்களைப் பார்த்தவர்களின் அச்சத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ஒவ்வொரு நிகழ்வையும் அத்துடன் ஒப்பிடாமல் நிம்மதியாக இருங்கள். இந்த மழை அபாயமற்றது.
மிகுந்த மேக மூட்டத்தால் சென்னையின் மேற்கு பகுதி,, காஞ்சிபுரம், அரக்கோணம், திருத்தணி போன்ற பகுதிகளில் நல்ல மழை இருக்கும். இதைப்போல் தென் தமிழகத்தில் மேகங்கள் தூத்துக்குடி நோக்கி நகர்வதால் இங்கும் நல்ல மழை பெய்யும். கடலூர் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புண்டு.” என பதிந்துள்ளார்.