டில்லி:
சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஷ்வர ராவ் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரிப்பதில் இருந்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விலகினார். தான் சிபிஐ இயக்குனர் தேர்வு குழுவில் இடம்பெற்றிருப்பதால், இந்த வழக்கை விசாரிக்க இயலாது என்று தெரிவித்து உள்ளார்.
சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வர்மா நீக்கப்பட்டதை தொடர்ந்து, சிபிஐ இடைக் கால இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டார். புதிய இயக்குனர் நியமனம் குறித்து வரும் 24ந்தேதி தேர்வு குழுவினர் கூடி முடிவு செய்ய உள்ளனர்.
இந்த நிலையில் சிபிஐ இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டதை எதிர்த்தும், சிபிஐ இயக்குநர் தேர்வு, நியமனத்தில் வெளிப்படை தன்மை கோரியும் வழக்கறிஞர் பிரசாத் பூஷண் சார்பில் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று தலைமைநீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், இந்த வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
புதிய சிபிஐ இயக்குனரை தேர்வு செய்யும் குழுவில் தானும் ஒரு உறுப்பினராக இடம் பெற்றுள்ளதாலேயே இவ்வழக்கில் இருந்து தான் விலகுவதாக விளக்கம் அளித்துள்ள ரஞ்சன் கோகாய், நாகேஸ்வரராவ் நியமனத்திற்கு எதிரான வழக்கை ஜனவரி 24 ம் தேதி வேறொரு அமர்வு விசாரிக்கும் என தெரிவித்துள்ளார்.