டில்லி
நேற்று ஒரே தினத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு சுமார் 750க்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரித்துள்ளது.
இந்த மாதம் தொடக்கத்தின் போது உச்சநீதிமன்றத்தில் 57,785 வழக்குகள் நிலுவையில் இருந்தன. இதில் 13,257 வழக்குகள் முடிவடையாத நிலையில் அல்லது தயாராகாத நிலையில் உள்ளன. அதாவது இந்த வழக்குகள் முழுமையடையாமல் உள்ளதால் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் உள்ள குறைபாடுள்ள வழக்குகள் என அழைக்கப்படுபவை ஆகும்.
இந்த வழக்குகள் வெகு நாட்களாக நிலுவையில் இருந்ததால் நேற்று இந்த வழக்குகளில் இருந்து 750க்கும் மேற்பட்ட வழக்குகளை தலைமைநீதிபதி ரஞ்சன் கோகாய், மற்றும் நீதிபதிகள் தீபக் குப்தா மற்றும் சஞ்சீவ் கன்னா ஆகியோரின் அமர்வு விசாரித்தது. ஒரே நாளில் இத்தனை வழக்குகள் விசாரிக்கப்பட்டது குறித்து மதிய உணவுக்குப் பின் நடந்த பகுதியில் தலைமை நீதிபதி விளக்கம் அளித்தார்.
ரஞ்சன் கோகாய், “பல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டு அதற்கு மேல் நகராமல் உள்ளது. இவற்றை குறித்து தெரிந்துக் கொள்ள அமர்வு 750 வழக்குகளை எடுத்துக் கொண்டது. இந்த வழக்குகளில் வரிசை எண் 12 முதல் 751 வரை உள்ள வழக்குகள் குறைபாடுள்ள வழக்குகள் ஆகும்.
இவற்றை குறித்து ஏற்கனவே வழக்கு தொடுத்தவர்களுக்கு விவரம் அனுப்பியும் எவ்வித முன்னேற்றமும் இன்றி இருந்தது. இதை ஒட்டி நாங்கள் அந்த வழக்குகளில் உள்ள குறைபாடுகளை 2 வாரங்களுக்கு சரி செய்ய உத்தரவிட்டுள்ளோம். இந்த வழக்குகள் கடந்த 2010, 2011 மற்றும் 2012 ஆம் வருடங்களில் இருந்து நிலுவையில் உள்ளன. உடனடியாக இவற்றை முடிக்க உள்ளோம்”என தெரிவித்தார்.
அப்போது ஒரு வழக்கறிஞர் 4 வாரங்கள் அவகாசம் கேட்டதற்கு 2 வாரங்களுக்கு மேல் நேரம் அளிக்க ரஞ்சன் கோகாய் மறுத்து விட்டார்.