குடி உரிமை சட்ட விவகாரத்தால் சிதறுகிறது பா.ஜ.க. கூட்டணி
தென் மாநிலங்களில் உள்ள பிராந்திய கட்சிகள் அனைத்தும் சொல்லி வைத்த மாதிரி பா.ஜ.க.வை கூட்டணியில் சேர்க்க மறுத்து –கதவை சாத்தி தாழ் போட்ட நிலையில்-
7 வட கிழக்கு மாநிலங்களில் உள்ள பா.ஜ.க. கூட்டணி கட்சிகளும்-தங்கள் அணியில் இருந்து பா.ஜ.க.வை விரட்டும் நடவடிக்கைகளை தொடங்கி விட்டன.
காரணம்- குடி உரிமை சட்ட திருத்த மசோதா.
அசாம்,அருணாச்சல பிரதேசம்,நாகாலாந்து,மிசோரம்,மேகாலயா,மணிப்பூர், மற்றும் திரிபுரா ஆகிய 7 பிராந்தியங்கள் ,”வட கிழக்கு மாநிலங்கள்’’ என்கிற குடையின் கீழ், நாட்டு வரைபடத்தின் உச்சத்தில் உள்ளன.
7மாநிலங்களுமே கொஞ்ச காலத்துக்கு முன்பு காங்கிரஸ் அரண்களாக இருந்தவை. கடந்த மக்களைவை மற்றும் சட்டமன்ற தேர்தலின் போது அங்கு செல்வாக்குள்ள சில மாநில கட்சிகளை பா.ஜ.க.தனது வலைக்குள் இழுத்து “ வட கிழக்கு ஜனநாயக கூட்டணி’’ என்ற புதிய அமைப்பை ஏற்படுத்தியது.இதன் பெயர் சுருக்கமாக ‘நேடா’.பரந்து பட்ட என்.டி.ஏ.அணியின் பிராந்திய அணிதான் இந்த ‘நேடா’.
மத்தியில் பா.ஜ.க.ஆட்சிக்கு வந்த பின் இந்த 7 மாநிலங்களையும் ‘நேடா’கைப்பற்றியது.கூட்டணி வண்டி ஒழுங்காக ஓடிக்கொண்டிருந்த நிலையில்- குடி உரிமை சட்ட திருத்த மசோதா என்ற பெயரில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மசோதா –வண்டியின் உதிரி பாகங்களை சிதைத்து விட்டது.
அந்த மசோதாவுக்கு ஏன் எதிர்ப்பு?
மத அடக்குமுறை காரணமாக பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான், மற்றும் பங்ககாதேஷில் இருந்து ஓடி வந்த அகதிகள் இந்த மாநிலங்களில் பெருமளவு உள்ளனர். அவர்களில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு –இந்திய குடி உரிமை வழங்க இந்த சட்டம் வகை செய்கிறது.
‘’வந்தேறிகளை வாழவைத்து பூர்வீக குடிகளின் குடி கெடுப்பதா’’ என ஏழு மாநில மக்களும் போர்க்குரல் எழுப்ப –அவர்களுக்கு ஆதரவாக பிராந்திய கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன.
மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்து போரிட இந்த மாநிலங்களின் 10 கட்சி தலைவர்கள் நேற்று (செவ்வாய் கிழமை) அசாம் தலைநகர் கவுகாத்தியில் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர்.இவர்களில் 7 கட்சி தலைவர்கள் ‘நேடா;வில் அதாவது பா.ஜ.க. கூட்டணியில் இருப்பவர்கள்.மேகலாயா முதல்வர் சங்மா,மிசோரம் முதல்வர் சோரம்தங்கா ஆகியோர் இந்த ஆலோசனையில் பங்கேற்றவர்களில் குறிப்பிடத்தக்கோர்.
இந்த மசோதா மக்களைவில் ஏற்கனவே நிறைவேறி விட்டது .மாநிலங்களைவில் நிறைவேற்றப்படவேண்டும்.அங்கும் நிறைவேறி விட்டால் சட்டம் அமலுக்கு வந்து விடும்.
இதனை தடுத்த நிறுத்த ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து முறையிட இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் ஆதரவையும் நாட இந்த கட்சிகள் திட்டமிட்டிருப்பது –பா.ஜ.க. தலைமையை அதிர வைத்துள்ளது. பிடிவாதமாக இந்த மசோதவை மோடி அரசு-சட்டமாக்கி விட்டால் – வட கிழக்கு மாநிலங்களில் பா.ஜ.க.கூட்டணி சிதறுவதை ,ஆண்டவனாலும் தடுக்க முடியாது.
பா.ஜ.க.வுக்கு மற்றொரு அடியாக இந்த சட்ட திருத்த மசோதோவை கண்டித்து திரிபுராவில் மக்கள் செல்வாக்கு மிக்க ராஜேஷ்வர் தெப்பர்மா என்ற பழங்குடியின தலைவர் பா.ஜ.க.வில் இருந்து நேற்று முன்தினம் விலகி விட்டார்.
-பாப்பாங்குளம் பாரதி