டெல்லி:
குடியுரிமை திருத்த சட்டம் தலித்துகளுக்கு ஆதரவானது என்றும், அதை எதிர்க்கும் எதிர்க்கட்சிகள் தலித்து களுக்கு எதிரானவர்கள் என பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், பாஜக தலைமை குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவு சேர்க்கும் வகையில், லித் சமூகத்தை அணுகி வருகிறது. குடியுரிமைத் திருத்த சட்டத்தில் உள்ள நன்மைகள் குறித்து பட்டியல் சாதி (எஸ்சி) சமூகத்தினரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அந்த சமூகத்தைச் சேர்ந்த அறிவுஜீவிகள், மருத்துவர்கள், கல்வியாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களை அணுகவும் கட்சி முடிவு செய்துள்ளது.
அதன் ஒருபகுதியான டெல்லியில் நேற்று நடைபெற்ற தலித் அமைப்புகள் மாநாட்டில் கலந்து கொண்ட பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, குடியுரிமை திருத்த சட்டம் குறித்து உரையாற்றினார்.
அப்போது, குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து தவறான பிரசாரம் மேற்கொள்வதன்மூலம், சிறுபான்மையினரை காங்கிரஸ் தலைமை தவறாக வழிநடத்தி வருகிறது என்று குற்றம் சாட்டியவர், இந்த சட்டம் குறித்து தலித் சமூகத்தைச் சேர்ந்த சில தலைவர்களும் தவறாக புரிந்துகொண்டுள்ளனர், வஞ்சித் பகுஜன் அகாதி (வி.பி.ஏ) தலைவர் பிரகாஷ் அம்பேத்கர் இந்த வார தொடக்கத்தில் சி.ஏ.ஏ மற்றும் தேசிய குடிமக்களின் பதிவு (என்.ஆர்.சி) “பட்டியல் சாதியினர் (எஸ்.சி) மற்றும் பழங்குடியினரையும் மோசமாக பாதிக்கும் என்று கூறியதை நினைவு படுத்தியவர்,
“பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து திரும்பும் இந்துக்களில் 66 சதவீதத்திற்கும் அதிகமானோர் பட்டியல் சாதி சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான், இவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் ஏழை மக்கள், இவர்கள்தான் அங்கு துன்புறுத்தப்பட்டு, திரும்பி வர வேண்டிய கட்டாயம் என்றவர், இதன்மூலம் பயனடைவோர் 70 முதல் 80 சதவீத தலித்துகள் என தெரிவித்தார்.
இந்த சட்டத் திருத்தம் மூன்று அண்டை நாடுகளைச் சேர்ந்த சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்குவதைப் பற்றியது என்றும், இங்குள்ளவர்களின் குடியுரிமையை பறிப்பது அல்ல என்று கூறினார். மேலும், காங்கிரஸ் உள்ளிட்ட பிற எதிர்க்கட்சிகள் வாக்கு வங்கி மற்றும் அதிருப்தி அரசியலை நடத்தி வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
இவ்வாறு ஜே.பி.நட்டா பேசினார்.