டெல்லி: குடியுரிமை திருத்தச் சட்ட (சிஏஏ)  விதிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது என்ற நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் மத்திய உள்துறை இணையமைச்சர் பதில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 3வது நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது, உறுப்பினர்கள் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர்கள் நித்யானந்த் ராய் மற்றும் கிஷண் ரெட்டி ஆகியோர் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தனர்.

அதில், 2019 டிசம்பர் 12 அன்று அறிவிக்கப்பட்ட குடியுரிமை (திருத்த) சட்டம், 2020 ஜனவரி 10 அன்று அமலுக்கு வந்தது. குடியுரிமை (திருத்த) சட்டம், 2019-கான விதிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதற்கான காலக்கெடு 2021 ஏப்ரல் 9 வரை மக்களவை துணை சட்டக் குழுவிற்கும், 2021 ஜூலை 9 வரை மாநிலங்களவை துணை சட்டக் குழுவிற்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தீவிரவாதத்திற்கு எதிராக பூஜ்ய சகிப்புத்தன்மை கொள்கையை அரசு கடைபிடித்து வருகிறது. அரசின் நடவடிக்கைகளின் காரணமாக கடந்த மூன்று வருடங்களாக தீவிரவாத செயல்கள் கணிசமாக குறைந்துள்ளன. எல்லையில் பாகிஸ்தானின் தாக்குதல்களுக்கும் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.

குற்றச்செயல்கள் மற்றும் குற்றவாளிகள் கண்காணிப்பு அமைப்பு (சிசிடிஎன்எஸ்) மற்றும் ஐசிஜிஎஸ் ஆகியவை குறித்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுடன் மத்திய அரசால் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

நிர்ணயித்த இலக்கு 14306 ஆக இருந்த போதிலும், 15773 காவல் நிலையங்களில் குற்றச்செயல்கள் மற்றும் குற்றவாளிகள் கண்காணிப்பு அமைப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 383 காவல் நிலையங்களில் இதை நிறுவுவதற்கான பணி தொடங்கியுள்ளது.

மத்திய ஆயுதம் தாங்கிய காவல் படைகளில் 27,167 பெண்கள் பணிபுரிகிறார்கள். மத்திய ஆயுதம் தாங்கிய காவல் படைகளில் பெண்களுக்கு பணி வழங்கவும், பதவி உயர்வு வழங்கவும் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு தெரிவித்துள்ளனர்.