டில்லி

டில்லி விமான நிலையத்தில் எழுந்து நிற்க முடியாமல் சக்கர நாற்காலியில் பயணம் செய்யும் பெண்ணை நிற்கச் சொல்லி மத்திய காவல்படையினர் வற்புறுத்தி உள்ளனர்.

அமெரிக்கக் குடியுரிமை பெற்றுள்ள இந்தியப் பெண் ஆர்வலர் விராலி மோடி ஒரு மாற்றுத் திறனாளி ஆவார்.   அவரால் கடந்த 2006 ஆம் ஆண்டு ஏற்பட்ட தண்டு வட காயம் காரணமாக நடக்கவோ எழுந்து நிற்கவோ இயலாத நிலையில் உள்ளார்.   ஆயினும் அவர் தனது சக்கர நாற்காலியில் பல நாடுகளுக்குப் பயணம் செய்து வருகிறார்.  தற்போது அவர் இந்தியா வந்துள்ளார்.

விராலி மும்பையில் இருந்து டில்லி மூலம் விமான நிலையம் செல்ல டில்லி  இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்துள்ளார்.  தனது சக்கர நாற்காலியை அவர் தனது  சாமான்களுடன் அளித்து விட்டு விமான நிலைய சக்கர நாற்காலியில் ஒரு போர்ட்டர் உதவியுடன் விமானத்தில் ஏற வந்துள்ளார்.   டில்லி விமான நிலையம் மத்திய காவல்படை கட்டுப்பாட்டில் உள்ளது.

அவர் பாதுகாப்பு சோதனைக்குச் சென்ற போது அங்கிருந்த பெண் காவலர் அவரை எழுந்து நிற்குமாறு சொல்லி உள்ளார்.  விராலி தாம் 13 வருடங்களாக ஊனம் காரணமாக நிற்கவோ நடக்கவோ இயலாத நிலையில் உள்ளதைச் சொல்லி  உள்ளார்.  அதற்குத் தனது பாஸ்போர்ட்டை ஆதாரமாகக் காட்டி உள்ளார்.   ஆயினும் அந்தப் பெண் காவலர் அவரை நிற்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

விராலியுடன் வந்த போர்ட்டர் அவர் நிலை குறித்து விவரித்தும் அந்தக்  காவலர் அதைக் கண்டுக் கொள்ளவில்லை.   விராலி நாடகமாடுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.   அப்போது அங்கு வந்த மற்றொரு பெண் அதிகாரி தலையிட்டு விராலியைச் சோதனை இட்டு விமானத்தில் ஏற அனுமதித்துள்ளார்.

இது குறித்து விராலி ஒரு புகார் கடிதம் அனுப்பி உள்ளார்.  அந்த புகாரில் அந்த பெண்  காவலரின் பெயர் பலகையை தன்னால் படிக்க முடியவில்லை எனவும் தாம் மூன்றாவது நுழைவாயில் வழியாகச் சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  அத்துடன் தம்மை மாற்றுத் திறனாளி எனவும் கருதாமல் தேவை இல்லாமல் துன்புறுத்தி மன உளைச்சல் அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

விராலிக்கு இது போன்ற அனுபவம் ஏற்கனவே நிகழ்ந்துள்ளது.  ஒருமுறை அவர் மும்பை விமான நிலையத்தில் பயணம் செய்யச் சென்ற போது ஒரு காவலர் அவரை எழுந்து நிற்கச் சொல்லி உள்ளார்.  தன்னால் முடியாது என விராலி கூறியும் அதைக் கேட்காமல் அந்த காவலர் அவரை இழுத்து நிறுத்தியதில் விராலி கீழே விழுந்து அடிபட்டு சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.