டெல்லி: நாடு முழுவதும் உள்ள ஐசிஎஸ்சி, ஐஎஸ்சி பள்ளிகளில் ஜனவரி 4ந்தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும் என அனைத்து மாநில முதல்வர்களுக்கும் சிஐஎஸ்சிஇ கடிதம் எழுதி உள்ளது.
சிஐஎஸ்சிஇ எனப்படும் (CISCE / Council for the Indian School Certificate Examinations ) மத்திய அரசின் பள்ளித் தேர்வு சான்றிதழ் கவுன்சில் மூலமாக நாடு முழுவதும ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி பாடத்திட்டத்தின்படி, 10-ம் வகுப்பு, பிளஸ்-2 தேர்வுகள் நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அமைப்பின்கீழ் நாடு முழுவதும் ஏராளமான பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த பள்ளிகள் அனைத்திலும் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 வகுப்புகளை நடத்தும் வகையில் ஜனவரி 4-ந் தேதிக்குள் பள்ளிகளை கண்டிப்பாக திறக்க வேண்டும் என்று இந்திய பள்ளி தேர்வு சான்றிதழ் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. இது சம்பந்தமாக சிஐஎஸ்சிஇ அமைப்பின் இயக்குநர் ஆராதோன், அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அவரது கடித்த்தில், சிஐஎஸ்சிஇ அமைப்பின் கீழ் செயல்படும் பள்ளிகளில், 10-வது, 12வது வகுப்புகள் ஜனவரி 4-ந் தேதிக்குள் திறக்க வேண்டும். தற்போது ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதுதொடர்பாக உரிய விளக்கங்களை பெறுவதற்கும், புராஜெக்ட், பிராக்டிகல் செய்வதற்கும் பள்ளிகளை திறந்தால்தான் முடியும். ஆசிரியர்களிடம் மாணவர்கள் நேரடியாக கேள்வி கேட்டு விளக்கங்களை பெற்றால் தான் அவர்கள் தேர்வுக்கு தயாராக முடியும். எனவே குறிப்பிட்ட காலத்திற்குள் பள்ளிகளை திறக்க வேண்டும். அதேநேரத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.