டில்லி

கொரோனா சிகிச்சைக்கான மாத்திரைகளை இந்திய மருந்து உறுப்பத்தி நிறுவனமான சிப்லா ரூ.68 விலையில் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.

இந்தியாவில் இதுவரை கொரோனாவால் 13.37 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு அதில் 8.50 லட்சம் பேர் குணம் அடைந்துள்ளனர்.   கிட்டத்தட்ட 63% பேர் குணமடைந்து வந்த போதிலும் இந்த விகிதத்தை அதிகப்படுத்தப் பல புதிய மருந்துகளுக்கு மருத்துவக் குழு ஒப்புதல் அளித்து வருகிறது.   கொரோனாவுக்கு எனத் தனிப்பட்ட சிகிச்சை மருந்து இல்லை என்றாலும் வேறு சில நோய்களுக்கான மருந்து கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

அவ்வகையில்  ஃபவிபிராவிர் என்னும் மருந்து இன்ஃப்ளுயன்ஸாவுக்கு பல நாடுகளில் அளிக்கப்பட்டு வருகிறது.  அந்த மருந்து மாத்திரை வடிவில் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு பலரும் குணம் அடைந்துள்ளனர்.  இந்த மருந்து குறைந்த மற்றும் மிதமான அளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்க மருத்துவர்கள் சிபாரிசு செய்து வருகின்றனர்.  இந்த மருந்தை இந்தியாவில் தயாரித்து அறிமுகம் செய்ய சிப்லா நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்ப்ட்டுள்ள்து.

சிப்லா நிறுவனம் இந்த மருந்தை மாத்திரை வடிவில் சிப்லென்ஸா என்னும் பெயரில் அறிமுகம் செய்ய உள்ளது.   வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் விற்பனைக்கு வரும் இந்த மாத்திரை ஒன்று ரூ.68 விலையில் விற்கப்பட உள்ளது.  இந்த மாத்திரைகள் முதலில் மருத்துவம்னைகள மற்றும் அரசு மூலம் மக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளது.