பூபதி பாண்டியன் இயக்கம், விமல் நாயகன், கயல் ஆனந்தி நாயகி.. என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம்.

“ஏன் எதிர்பார்ப்போடு வந்தீர்கள்” என்று ஆரம்பத்திலேயே அரிவாளைத் தூக்கி மிரட்டுகிறார்கள். அதுவும் மொக்கை (திரைக்கதை) அரிவாள்!

இரு பெரும் குடும்பத்துக்குள் தீராப் பகை.. அந்த வீட்டுப் பையனும் இந்த வீட்டு பெண்ணும் காதலிக்கிறார்கள்.. என்று ரொம்பப் புதுசான (!) கதை. அதற்கு காமெடி (!) துணை நாயகர்கள், அவ்வப்போது சண்டை என்று அதைவிடப் புதுசாக (!) திரைக்கதை.. (இதற்கு மேல் ஆச்சரியக்குறிகள் கைவசம் இல்லை)

பட்டுக்கோட்டை அருகில் இருக்கும் கிராமம் ஒன்றில் பெரிய நிலக்கிழார் பிரபு.   அவரது மகன் விமல், சட்டம் படித்துவிட்டு தேர்வு முடிவுக்காக காத்திருக்கிறார். இவரது அண்ணன் கார்த்திக் குமார்.

பக்கத்து ஊரில் இருக்கும் இன்னொரு பெரும் பணக்காரர்கள் ஜெயப்பிரகாஷ் –  சரண்யா பொன்வண்ணன் தம்பதி. இவர்களது மகள் சாந்தினையை காதலிக்கிறார் கார்த்திக் குமார்.

அவருக்கு இன்னொரு பெரிய பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு திருமணம் நிச்சயிக்கப்படுகிறது.

இதனால் கார்த்திக் குமார் விசம் அருந்திவிட.. அவரைக் காப்பாற்றிய விமல், பெண்ணை கடத்திவந்து சேர்த்தும் வைக்கிறார்.

ஆல்ரெடி ஜெயப்பிரகாஷ் –  சரண்யா பொன்வண்ணன் தம்பதியின் இளைய மகளும் விமலும் காதலிக்கிறார்கள்.

அவர்களது திருமணம் நடந்ததா என்கிற மீதிக்கதையை  தைரியம் இருந்தால் வெள்ளித்திரையில் காண்க.

ஒரு காலத்தில் வெள்ளிக்கிழமை வருகிறதோ இல்லையோ, விமல் படம் வந்துவிடும். இப்படி அடிக்கடி வந்தாலும் சலிக்கவைக்காத படங்களாக இருக்கும்.

தன் முகம், உடல் மொழிக்கு ஏற்ப, கொஞ்சம் சாந்த சொரூபி வேடத்தில் வந்து ரசிக்கவைப்பார் விமல். அவருக்கு “ஆக்சன் ஹீரோ” ஆசை காட்டி, அரிவாளைத் தூக்க வைத்து ரசிகர்களை பதம் பார்த்திருக்கிறார் இயக்குநர் பூபதி பாண்டியன்.

“பிஞ்சு மூஞ்சு” விமலின் நெஞ்சில், நஞ்சை விதைச்சுட்டீங்களே பூபதி பாண்டியன்!

விமலுக்கு இணை, ஆனந்தி. துள்ளலான நடிப்பு. விமலை கலாய்ப்பது, அவரது  செல்போனை இன்னொருவரிடமிருந்து மிரட்டிப்பேசி வாங்கிச் செல்வது.. போன் உடைந்ததும் ஏதேதோ பேசி சமாளிப்பது  என்று ரசிக்கவைத்திருக்கிறார் ஆனந்தி. சில சமங்களில் ஓவர் ஆக்டிங்.. குறைச்சுக்கலாம்.

காமெடிக்காக ரோபோ சங்கரை தேர்ந்தெடுத்ததுதான் காமெடி.  பொருந்தாத உடல்மொழி, டயலாக் டெலிவரி.. இதில் வடிவேலு மாதிரி முயற்சி செய்திருக்கறார்.

தப்பில்லைதான்.. நன்றாக முயற்சி செய்து தேறி.. சில வருடங்கள் கழித்து நடிக்க வரலாமே. ரசிகர்கள் பாவமில்லையா?

மற்றபடி பிரபு, சரண்யா, ஜெயப்பிரகாஷ், நீலிமா ராணி, கார்த்திக் குமார், வம்சி கிருஷ்ணா என பெரும் நட்சத்திரப்பட்டாளம்.  சொல்வதற்கு ஏதுமில்லை. அவர்களைச் சொல்லி குற்றமில்லை.

“இசை : ஜேக்ஸ் பிஜோய்

ஒளிப்பதிவு: பி.ஜி.முத்தையா, சூரஜ் எடிட்டிங் : கோபி கிருஷ்ணா” – என்று பட்டியலிடுவதைத் தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை.

“பட்டத்து யானை” இயக்கிய பூபதி பாண்டியனா இந்தப் படத்தை இயக்கியது என்கிற அளவுக்குத்தான் “மன்னர் வகையறா” இருக்கிறது.

குடும்பப்கை.. இடையே காதல் என்கிற படத்துக்கு எதற்காக சாதி வெறி, இறால் பண்ணை ஆபத்துகள் என்றெல்லாம் காட்சிகளை இழுத்தார்கள் என்று தெரியவில்லை.

விமலின் சொந்தப்படமாம்.. சொந்தக்காசில் “மன்னர் வகையறா”!

வேறொன்றும் சொல்வதற்கில்லை!