சென்னை
மூடப்பட்டிருந்த திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்ட போதிலும் ரசிகர்களின் வரவேற்பு இல்லாததால் அரங்கு உரிமையாளர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்பட்டன. கிட்டத்தட்ட 8 மாதங்களுக்கு பிறகு அரசு அறிவித்த ஊரடங்கு விதிகள் தளர்வுகளின் அடிப்படையில் திரையரங்குகள் மீண்டும் நவம்பர் 10 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன. திரையரங்குகளில் 50% கொள்ளளவு வரை மட்டுமே ரசிகர்களை அனுமதிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் வி பி எஃப் உள்ளிட்ட பிரச்சினைகள் தலை தூக்கி அதற்கு தீர்வு காணப்பட்டுள்ளது. எனவே புதிய திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. ஆயினும் மக்கள் திரையரங்குகளுக்கு வருவது மிகவும் குறைவாகவே உள்ளது. இது திரையரங்கு உரிமையாளர்களை வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது. போகப்போக ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரிக்கலாம் அரங்கு உரிமையாளர் ஒருவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
விரைவில் பிரபல நடிகர்களான, ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்டோரின் படங்கள் வெளியாகும் போது இந்நிலை மாறும் என நம்பிக்கை நிலவுகிறது. தற்போது ரசிகர்களின் வரவேற்பு இல்லாத காரணத்தால் பல திரைப்படங்களை வெளியிட படத்தயாரிப்பாளரகள் தயங்கி வருவதாக கூறப்படுகிறது. பொங்கல் நேரத்தில் தனுஷ் மற்றும் சிம்பு நடிக்கும் படங்கள் வருவதாக கூறப்படுவதால் இது மாறும் என கூறப்படுகிறது.