சென்னை:

பிரபல சினிமா பைனான்சியர் நடிகர் ரஜினிகாந்த் மீது, கடன்   பிரச்சினை காரணமாக அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் சார்பில் உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சினிமா பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா, ரஜினிமீது தொடர்ந்துள்ள வழக்கில்,  ‘என்னுடைய மகளின் மாமனார் கஸ்தூரிராஜா, கடந்த 2012 -ம் ஆண்டு 2 தவணையாக ரூ.65 லட்சம் கடன் பெற்றதாகவும், இந்தக் கடன் தொகையை திருப்பித் தரவில்லை என்றால், அந்தத் தொகையை நான் கொடுப்பேன் என்று ரஜினி கொடுத்த உத்தரவாதத்தின் அடிப்படையில் அவருக்குக் கடன் கொடுத்ததாகவும்’ கூறியிருந்தார். அதன்பிறகு நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து, ரஜினி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,  போத்ரா தன்னிடம் பணம் பறிக்க முயற்சி செய்வதாக கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்யக்கோரி தான் ஏற்கனவே மனுதாக்கல் செய்திருந்தேன்.

இதில், போத்ரா  குறித்து அவதூறு பேசுவதாக கூறி என்மீது  ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்தார். ஆனால் இந்த வழக்கின் விசாரணையின்போது, பைனான்சியர் போத்ரா விசாரணைக்கு  ஆஜராகாததால் வழக்கு நிரகாரிக்கப்பட்டது. ஆனால், அவர்  அதை எதிர்த்து அவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஜார்ஜ்டவுன் நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து வழக்கை மீண்டும் விசாரிக்க ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது. அதன்படி வழக்கை விசாரித்த நீதிமன்றம் போத்ரா தொடர்ந்த வழக்கில் நேரில் ஆஜராக எனக்குச் சம்மன் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.

பொதுவாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் பதில் மனுவில் கூறப்பட்டுள்ள காரணத்தின் அடிப்படையில் அவதூறு வழக்கு தொடர முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பரிசீலிக்காமல் ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் எனக்கு சம்மன் அனுப்பியுள்ளது. எனவே, என் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும் என அந்த மனுவில் நடிகர் ரஜினிகாந்த் கோரியிருந்தார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.