டில்லி

லோக் பால் தேர்வுக் குழு கூட்ட விவரங்களை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வெளியிட மத்திய தகவல் ஆணையம் மறுத்துள்ளது.

அரசின் நடவடிக்கைகளில் வெளிப்படைத் தன்மையின் அடிப்படையில் பொதுமக்களுக்கு அரசின் செயல்பாடுகள்: குறித்து விவரங்களை தெரிந்து கொள்ளத் தகவல் அறியும் சட்டம் இயற்றப்பட்டது.   இந்த தகவல்களை அளிக்க மத்திய தகவல் ஆணையம் அமைக்கப்பட்டது.   ஊழலற்ற இந்த ஆணையம் மத்திய அரசின் கீழ் இயங்கி வருகிறது.  இதில் பொதுமக்கள் தகவல்களைத் தங்கு தடையின்றி பெறச் சட்டம் வழி வகை செய்துள்ளது.

லோக்பால் சட்டப்படி சுதந்திரமான அமைப்புக்களை உறுதி செய்யும் வகையில் பதவி நியமனம் செய்யும் குழுவில் ஆளும்,கட்சி உறுப்பினர்கள் அதிகம் இருக்கக் கூடாது என்பது முக்கியமானதாகும்.   ஆகவே பிரதமர், மக்களவையால் அங்கீகாரம் அளிக்கப்பட்ட எதிர்க்கட்சி தலைவர், இந்தியத் தலைமை நீதிபதி அல்லது அவர் பரிந்துரைக்கும் உச்சநீதிமன்ற நீதிபதி ஆகிய நால்வர் மற்றும் இவர்களால் பரிந்துரைக்கப்படும் சட்ட நிபுணர்கள் மட்டும் குழுவில் இடம்பெற முடியும்.

கடந்த 2014 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பிறகு எதிர்க்கட்சி அந்தஸ்து எந்த கட்சிக்கும் கிடக்கவில்லை என்பதால் மக்களவையில் அதிக அளவில் உறுப்பினர்களைக் கொண்ட ஆளும் கட்சி அல்லாத கட்சியின் தலைவரை நியமிக்க மத்திய அரசு சட்டம் இயற்றி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.  ஆனால் மோடி அரசு அவ்வாறு எதுவும் செய்யவில்லை..  மாறாக எதிர்க்கட்சி என ஒன்று இல்லை என்பதால் எதிர்க்கட்சி தலைவரைத் தேர்வுக் குழுவில் இடம்பெறவில்லை என்க கூறி நியமனம் நடத்தவில்லை.

இந்த இழுபறி காரணமாக லோக்பால் நியமனம் நடைபெறாமல் இருந்ததால் உச்சநீதிமன்றத்தில் கடந்த 2017 ஆம் வருடம் ஏப்ரலில் வழக்கு தொடரப்பட்டது.  உச்சநீதிமன்ற தலையிட்டால் எதிர்க்கட்சி தலைவர் இல்லாமலே தேர்வுகள் நடத்தலாம் எனத் தீர்ப்பு வந்தபிறகும் எவ்வித நியமனமும் நடக்கவில்லை.   அதையொட்டி மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.  அதன் பிறகே தேர்வுக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

அந்த கூட்டத்தில் நடந்த நிகழ்வுகளின் விவரங்கள்  குறித்து தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேள்விகள் எழுப்பப்பட்டன.   இந்த குழுவில் பெரும்பாலான அரசு மற்றும் ஆளும் கட்சி பிரதிநிதிகள் இடம் பெற்றிருந்ததால் ஏற்பட்ட ஐயத்தின் காரணமாக இந்த கேள்விகள் எழுப்பட்டுள்ளதாக் கூறப்படுகிறது.   இதற்கு மத்திய தகவல் ஆணையர் சரோஜ் புன்ஹானி பதில் அளித்துள்ளார்.  அவர் இது குறித்த தகவல்களை வெளியிட மறுத்துள்ளார்.

அவர் தனது பதிலில், “லோக்பால் சட்டம் அரசு அலுவலகங்களில் பொதுமக்களிடையே வெளிப்படைத்தன்மை தேவை என்பதை வலியுறுத்திய போதிலும்,. லோக் பால் மற்றும் லோக் ஆயுக்தா வின் உறுப்பினர்கள் தேர்வு மிகவும் ரகசியமானது எனச் சொல்கிறது.  அதன்படி லோக் ஆயுக்தா மற்றும் லோக் பால் தேர்வுகள் குறித்த விவரங்களைத் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வெளியிட முடியாது.” எனத் தெரிவித்துள்ளார்.