டெல்லி:

ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்படும் முன்பே அவரது உயிருக்கு ஆபத்து இருந்ததை அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ தெரிந்து வைத்துள்ளது. ‘‘இந்தியா ராஜீவுக்கு பிறகு’’ என்று தலைப்பில் வெளியான 23 பக்க அறிக்கையில் இதுகுறித்த தகவல் இடம்பெற்றிருந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த அறிக்கையானது 1986ம் ஆண்டிலேயே தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட 1991ம் ஆண்டு மே 21ம் தேதி முன்பே இப்படி ஒரு அறிக்கையை சி.ஐ.ஏ தயாரித்து வைத்துள்ளது. அதாவது அவர் இறப்பதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்பே இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த அறிக்கையில்…

சீக்கியர் அல்லது காஷ்மீர் முஸ்லிம்களால் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டால் நாடு முழுக்க பெரும் இன அல்லது மதக் கலவரம் ஏற்படும். அப்த கலவரத்தை ராணுவத்தாலேயே கட்டுப்பட்ட முடியாத அளவுக்கு பயங்கரமாக இருக்கும். ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட பிறகு நரசிம்மராவ் அல்லது வி.பி.சிங் ஆகியோரில் யாராவது பிரதமராகலாம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையின் ஒரு பகுதியில், ஒரு இந்து மத வெறி கொண்ட நபராலும் கொலை நடக்க வாய்ப்புள்ளது என்று சி.ஐ.ஏ குறிப்பிட்டுள்ளது.

ராஜீவ்காந்தி கொலையை முன் கூட்டியே கணித்த சி.ஐ.ஏ.வால் விடுதலை புலிகள் தான் கொலை செய்யப்போகிறார்கள் என்பதை கணிக்க முடியாமல் போனது. சி.ஐ.ஏ. அறிக்கையில் விடுதலை புலிகள் குறித்து எவ்வித தகவலும் இடம்பெறவில்லை

எனினும் தமிழர்கள்-சிங்களர்கள் இடையிலான பிரச்சினையில் ராஜீவ்காந்தி தலையிட்டது குறித்து உள்ளது. விடுதலை புலிகள் அச்சுறுத்தல் குறித்து சி.ஐ.ஏ குறிப்பிட்டு அது, தற்போது நீக்கப்பட்டிருக்கலாம் என்றும் கருத்தும் நிலவுகிறது.

ராஜிவ் கொலை செய்யப்பட்டால் இந்தியா-அமெரிக்க உறவை பாதிக்கும். தேசியவாதம் பேசும் கட்சிகள் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆனால், ராணுவம் ஆட்சியை கைப்பற்ற வாய்ப்பே இல்லவே இல்லை என்றும் அந்த அறிக்கையில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சி.ஐ.ஏ 1986ல் தயாரித்த ஒரு இந்திய தலைவரின் கொலை குறித்த எச்சரிக்கை அறிக்கை, அவர் இறந்து 26 ஆண்டுகள் கழித்து வெளியாகியிருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.