சோவும் நம்மூர் பெரும் தலைகளும்.. நமக்குத் தெரிந்து இவ்வளவுதான்..
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் சிறப்புப்பதிவு
அரசியல் ரீதியாக தன்னை சோ கடுமையாக விமர்சித்த போதும் அவரை பெரிதும் மதித்து நண்பராக கருதினார் கலைஞர்.. சில சமயங்களில் அரசியல் லாபி விஷயத்தில் அதிகமாகவும் நம்பினார்..
சினிமாவில் நடித்தபோது நடிகரான சோவுடன் பெரிதும் நட்பு பாராட்டினார் நடிகை ஜெயலலிதா. சோ இயக்கிய படத்தில் ஜெயலலிதா கதாநாயகியாகவும் நடித்தார்.
ஆனால் அரசியல்வாதியாக மாறிவிட்ட ஜெயலலிதா அவர்கள் ஆரம்பத்தில் பத்திரிகையாளர் சோவின் பேச்சுகளை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் அதே ஜெயலலிதா பின்னர் சோவை ராஜகுருவாக ஏற்றத்துடன் தனிப்பட்ட ரீதியில் அவரை நம்பி பெரும் பொறுப்புகளையும் கொடுத்தார்..
நடிகர் நாகேஷ் உடன் பிணக்கு ஏற்பட்ட போது அந்த இடத்தில் நகைச்சுவை பங்களிப்பிற்காக நடிகர் சோவை தனது படங்களில் பயன்படுத்த ஆரம்பித்தார் எம்ஜிஆர்.. ஆனால் அவர் தனிக் கட்சி ஆரம்பித்தபோது அவரின் கொள்கைகளை அப்பாயிசம் என சிவாஜியின் தங்கப்பதக்கம் படத்தில் போட்டு வறுத்து எடுத்தார் சோ..
இத்தனைக்கும் திமுகவிலிருந்து எம்ஜிஆர் நீக்க போட்ட போது அவர் மிகப் பெரிய ஆளாக உருவெடுப்பார் என்று உடனே சொன்னவரும் சோதான் . அப்படிப்பட்ட சோவை அரசியலுக்காக எம்ஜிஆர் நம்பவே இல்லை.. கடைசிவரை கிட்ட சேர்த்து வாரிப் பூசிக் கொள்ளவும் இல்லை..