சென்னை

சென்னை உயர்நீதிமன்றம் அரசு பணி நியமனத்துக்கு ஒராண்டு கால முதுகலை பட்டப்படிப்புகள் செல்லும் எனத் தெரிவித்துள்ளது.

டி என் பி எஸ் சி மூலம் கடந்த 2017-ஆம் ஆண்டு தட்டச்சர் பணிக்கு விண்ணப்பித்த பரந்தாமன் என்பவர் தேர்வில் 201 மதிப்பெண்கள் பெற்றார்.  ஒரே மதிப்பெண்களைப் பலர் பெற்றிருந்ததால், ஆட்சேர்ப்புக்கு முதுகலை பட்டங்கள் உயர்தகுதி அடிப்படையில் அமைந்தது.

எம்பிஏ மற்றும் முதுகலை நூலகம் ஆகிய இரண்டு முதுகலைப் பட்டங்களை பரந்தாமன் பெற்ற போதும்,  விண்ணப்பத்தில் முதுகலை நூலகம் மட்டுமே குறிக்க முடிந்ததால்,  எம்பிஏ-வை அவர் சேர்க்கவில்லை. ஆகவே, முதுகலை நூலகம் ஓராண்டு பட்டப்படிப்பை தகுதியாக கருத முடியாது என்று அவருக்கு பணி தர மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பரம்ந்தாமன் தொடுத்த மனுவின் மீதான தீர்ப்பில்

”பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைகளின்படி,  முதுகலை சட்டம் மற்றும் முதுகலை நூலக அறிவியல் போன்ற ஓராண்டு பட்டப்படிப்புகள் செல்லுபடியாகும் படிப்புகளாக உள்ளன.  தமிழக அரசு ஊழியர்கள் (சேவை நிபந்தனைகள்) சட்டத்தின் 25-வது பிரிவின் படி பத்தாம் வகுப்பு பிளஸ் 2 என்ற அடிப்படைப் பள்ளிக் கல்வி கூட இல்லாமல் நேரடி முதுகலை பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்களை நீக்குவதே இந்த விதியின் நோக்கம்.  முதுகலை பாடத்தின் கால அளவைப் பற்றியது அல்ல

என்று தெரிவித்துள்ளது.

எனவே டிஎன்பிஎஸ்சியின் உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம் வருகின்ற ஜூலை 31-ஆம் தேதிக்குள் மனுதாரருக்கு தட்டச்சர் பணி வழங்க உத்தரவிட்டுள்ளது.