கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய இரண்டு படங்களில் கவனம் செலுத்தி வரும் சியான் விக்ரம் அடுத்ததாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் சியான் 60 படத்தில் இணைகிறார்.

சியான் விக்ரமுடன் முதல் முறையாக துருவ் விக்ரமும் இணைந்து நடிக்கவுள்ளார்.

இத்திரைப்படத்தில் நாயகியாக நடிக்க நடிகை வாணிபோஜன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக நடிப்பார் என தெரிகிறது. விக்ரமுக்கு ஜோடியாக நடிகை சிம்ரன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தை லலித் குமார் தயாரிக்கிறார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பட்டையை கிளப்பியது.

இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது அவருக்கு பதிலாக சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இப்படத்தில் நடிகர் பாபி சிம்ஹா இணைந்துள்ளார் என்ற அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. வில்லன், குணச்சித்திர பாத்திரம், ஹீரோ என எந்த பாத்திரமாக இருந்தாலும் அதில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தும் திறன் கொண்டவர் பாபி சிம்ஹா.

சமீபத்திய பேட்டியில் இப்படம் குறித்த முக்கிய அப்டேட்டை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ளார். இதுவரை ‘சியான் 60’ படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாகவும், கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்தபின் எஞ்சியுள்ள படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.