சித்தூர் தென்கரை மஹாராஜேஸ்வரர் திருக்கோவில், திருநெல்வேலி மாவட்டம்., வள்ளியூர் அருகே அமைந்துள்ளது.
இந்தச் சித்தூர் திருக்கோவிலின் வரலாறு, சபரிமலை ஐயப்பன் கோவில் வரலாற்று உடன் தொடர்புடையதாக இருக்கிறது. முற்காலத்தில் பந்தள நாட்டை ஆண்டு வந்த மன்னனுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. தனக்கு பின்னர் தனது ராஜ்யத்தை ஆட்சி செய்ய ஒரு ஆண் வாரிசு இல்லை எனப் பந்தள மன்னர் கவலைபட்டுக் கொண்டிருந்தார். இப்படி இருக்கையில் ஒருநாள் பந்தள ராஜா தனது பரிவாரங்களுடன், காட்டிற்கு வேட்டையாடச் செல்கிறார்.
அங்குப் பம்பா நதிக்கரையில் மலர்கள் சூழ்ந்த வனத்தில் ஒரு ஆண் குழந்தை கிடைக்க பெற்றது. அந்தக் குழந்தைக்கு மணிகண்டன் என்ற பெயர் சூட்டி அரண்மனையில் சீராட்டி வளர்த்து வந்தார்கள். சிறிது காலம் சென்ற பின்னர் பந்தள நாட்டின் ராணிக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. அந்தக் குழந்தைக்கு ராஜ ராஜன் என்ற பெயர் சூட்டி வளர்த்து வந்தார்கள். மணிகண்டன், ராஜராஜன் ஆகிய இரண்டு குழந்தைகளும் வளர்ந்து முடிசூட்டும் வயதை அடைந்தபோது, பந்தள நாட்டின் ராணிக்கு தனது சொந்த மகனுக்கு முடிசூட்ட வேண்டும் என்ற ஆசை வருகிறது.
இதனால் தனது வளர்ப்பு மகன் மணிகண்டனை அளிக்கச் சதி செய்து, புலிப்பால் கொண்டு வரச் சொல்லிக் காட்டிற்கு வேட்டைக்கு அனுப்புகிறாள். மணிகண்டனும் தனது தாயின் உத்தரவுப் படி காட்டிற்கு சென்று அவருடைய அவதார நோக்கப்படி மஹிஷியை சம்ஹாரம் செய்து, காட்டில் இருந்து புலி மீது அமர்ந்து, புலிக்கூட்டங்கள் புடை சூழ பந்தள நாட்டிற்கு திரும்புகிறார்.
இதன் பின்னர் அவர் சபரிமலையில் சாஸ்தாவாக இருந்து அருள்பாலிக்கும் வரலாறு நமக்குத் தெரியும். தனது அண்ணன் மணிகண்டன் இல்லாத நாட்டில் இருக்க பிடித்தம் இல்லாத ராஜ ராஜன் பந்தள நாட்டை விட்டு வெளியேறிக் கால்போன போக்கில் நடந்து, தென்பாண்டி நாட்டிற்குள் வருகிறார். அங்கு நம்பியாற்றின் கரை வழியாக நடந்து வந்த ராஜ ராஜன் தற்போது இந்தக் கோவில் அமைந்திருக்கும் பகுதிக்கு வரும்போது, அங்குள்ள பாறை மீது அமர்ந்து தனது அண்ணன் மணிகண்டனை நினைத்து யோக நிஷ்டையில் தவம் இருந்தார்.
அவர் அங்குத் தங்கி தவம் இயற்றிக்கொண்டிருந்த போது ஒருநாள் நம்பியாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அப்போது ஆற்றுப்பகுதியில் மேய்ச்சலுக்கு வந்திருந்த பசு கூட்டங்களில், பசு மாடுகள் ஆற்றுக்கு ஒரு புறமும், கன்றுகள் மறுகரையிலும் சிக்கிக்கொண்டன. தாயை பிரிந்த கன்றுகள் மறுகரையில் நின்று அலறிக் கொண்டிருக்க, அங்கு மாடுகளை மேய்த்து கொண்டிருந்த கிழவி செய்வதறியாது திகைத்து நிற்கிறாள். அப்போது ஆற்றின் தென்கரையில் மேடு மீது அமர்ந்திருந்த ராஜராஜனை பார்த்து, ஐயா மகாராசா என் கன்றுகளை காப்பாத்தி கொடு எனக் கதறுகிறாள். யோகநிஷ்டையில் அமர்ந்திருந்த ராஜராஜன் கிழவியின் அழுகுரல் கேட்டுக் கண்விழித்து பார்த்து நிலைமையை உணர்கிறார், உடனே தனது அண்ணன் மணிகண்டனை நினைத்து ஆற்றை நோக்கித் தனது கையைக் காட்டுகிறார்.
அவர் கையை உயர்த்தி காட்டிய உடன் நம்பியாற்றில் ஓடிய வெள்ளம் இரண்டாகப் பிரிந்து இரண்டு கரைகளுக்கும் இடையில் பாதை உண்டாகிட, மறுகரையில் சிக்கிக்கொண்டிருந்த கன்றுகள் தனது தாய் பசுக்கூட்டங்களுடன் இணைந்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தன. இதனை கண்ட அந்தக் கிழவி ராஜ ராஜனின் மகிமையை உணர்ந்து எங்க ஊர காக்க வந்த மகாராசா என வணங்கிப் பணிகிறாள். அன்று முதல் மஹாராஜேஸ்வரர் என்ற பெயர் தாங்கி நம்பியாற்றின் தென்கரையில் கோவில் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருவதாக இந்தக் கோவிலின் வரலாறு கூறப்படுகிறது.
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கொடியேற்றத்துடன் பத்து நாட்கள் விழா வெகு விமரிசையாக நடைபெறும். சாஸ்தா கோவில்களிலேயே இங்கு மட்டும் தான் தேரோட்டம் நடைபெறுகிறது என்பது சிறப்பம்சம் ஆகும்.
இங்கு நடைபெறும் வன்னிக்குத்து விழா மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும்.
பல குடும்பங்களுக்கும் குல தெய்வமாக விளங்கும் இந்தத் தென்கரை மஹாராஜா கோவிலுக்குக் கேரளாவில் இருந்தும் அதிகளவு பக்தர்கள் பங்குனி உத்திரத்துக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
நம்பியாற்றின் தென்கரையில் சுவாமி வீற்றிருந்து அருள்பாலிப்பதால் தென்கரை மஹாராஜேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.
இந்தத் திருக்கோவிலில் உள்ள பேச்சி அம்மன் மருதாணி மரத்தின் அடியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள். இவள் மிகவும் வரப்பிரசாதியாகும்.