சென்னை: மதுரை சித்திரைத் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது.
மதுரையில் நடைபெற்று வரும் சித்திரைத் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி வழங்குவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு, காயத்திற்கு தகுந்தவாறு, ரூ.2லட்சம், ரூ.1 லட்சம் என நிவாரண நிதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
மதுரை சித்திரைத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. முன்னதாக பக்தர்கள் நலன் கருதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தின்போது யாரும் வைகை ஆற்றுக்குள் இறங்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், கள்ளழகர் ஆற்றில் இறங்குவதை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் மதுரையின் முக்கிய பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. எங்கு திரும்பினாலும் மக்கள் கூட்டமே காணப்பட்டது. இதன் காரணமாக பல பகுதிகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பெண்களும், குழந்தைகளும் வயதானவர்களும் கூட்டத்தில் சிக்கி தவிப்புக்குள்ளானார்கள். இந்த வைகை ஆற்றின் கரையோரம் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் மயக்கமடைந்தனர். இதில், 60 வயது மூதாட்டி மற்றும் 40 வயது ஆண் பரிதாபமாக இறந்தனர். சுமார் 24 பேர் வரை காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காவல்துறையினர் கூட்டத்தை கட்டுப்படுத்துவதில் மெத்தனம் காட்டியதாலேயே இந்த விபத்து நடைபெற்றதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.