சிப் தட்டுப்பாடு காரணமாக வங்கிகளில் ஏடிஎம் கார்டுகள் வழங்கும் பணி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக நிலவி வரும் சிப் தட்டுப்பாடு இன்னும் தீர்ந்தபாடில்லை.
டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்துள்ள போதிலும் கார்ட் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகளவு உள்ளது.
உலகம் முழுவதும் ஆண்டுக்கு சுமார் 300 கோடி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.
செமிகண்டக்ட்ர் தொழிற்சாலைகளில் சிப் தயாரிப்பு பணிகள் மந்தமடைந்ததை அடுத்து இந்த அளவு கணிசமாக குறைந்துள்ளது.
பழைய அட்டைகளை புதுப்பிப்பது, தொலைந்து போன அட்டைகளுக்கு மாற்று அட்டைகள் வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
கார்டுகள் வழங்க அனுமதி பெற்றுள்ள நிறுவனங்கள் மூலம் சிப் கார்டுகள் வங்கிகளுக்கு வழங்கப்படுகின்றன. வங்கிகளின் பல கிளைகளில் இந்த கார்டுகளின் கையிருப்பு தீர்ந்து போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், புதிய ஏடிஎம் கார்டுகளை வழங்கவோ, ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கு புதுப்பிக்கவோ வங்கிகளால் முடியவில்லை.
குறிப்பாக வணிக வங்கிகளை விட பொதுத்துறை வங்கிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளது.
புதிதாக கணக்கு துவங்குபவர்களுக்கு விர்சுவல் கார்ட் எனும் மெய்நிகர் ஏ.டி.எம். அட்டைகள் பரிந்துரைக்கப்படுகிறது அல்லது ‘கேஸ் ஆன் மொபைல்’ ஆப்ஷனை பயன்படுத்தி பணம் எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.
இதே சூழல் மேலும் சில மாதங்கள் தொடரும் நிலையில் கார்ட் மற்றும் ஏ.டி.எம். மெஷின்களின் பயன்பாடு வெகுவாக குறைய நேரிடும் என்றும் நெட் பேங்கிங், மொபைல் மற்றும் ஆப் மூலமான அடுத்த தலைமுறை பரிவர்த்தனைகள் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் கார்ட் மட்டுமே பயன்படுத்தி பழகிய வாடிக்கையாளர்கள் மீண்டும் வங்கிகளுக்குச் சென்று பணம் எடுக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.