ஹெனான், சீனா
சீனாவில் 25 மாணவர்களுக்கு உணவில் விஷம் வைத்த ஆசிரியைக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சீன நாட்டில் ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்த வாங் யுன் 2019 காலகட்டத்தில் மெங்மெங் என்ற பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்திருக்கிறார். மாணவர்களை நிர்வகிப்பது தொடர்பாக அப்போது சக ஊழியருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது. ஆத்திரமடைந்த வாங் யுன் 2019-ம் ஆண்டு மார்ச் மாதம், 25 மாணவர்கள் உண்ணும் உணவில் சோடியம் நைட்ரேட் விஷத்தைக் கலந்து உள்ளார்.
மாணவர்கள் அந்த உணவைச் சாப்பிட்டதால் வாந்தி, மயக்கம் ஆகிய உடல் உபாதைகளுக்கு உள்ளாகி 25 மாணவர்களும் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். சில நாட்களில் அவர்களில் 24 மாணவர்கள் குணமடைந்தனர். வாங் யுன் கைதுசெய்யப்பட்டு, அவருக்குச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
கடந்த 10 மாதங்களாகச் சிகிச்சை பெற்றுவந்த ஒரு மாணவர் உறுப்புகள் செயலிழந்து உயிரிழந்தார். வழக்கை விசாரித்த காவல்துறையினர், “குற்றவாளியான வாங் யுன் பள்ளியில் மாணவர்களுக்கு விஷம் கொடுப்பதற்கு முன்னர், தன் கணவருக்கும் அதே போன்று விஷம் கொடுத்துக் கொலைசெய்ய முயன்றிருக்கிறார்.” எனத் தெரிவித்தனர்.
ஆயினும் கணவர் லேசான பாதிப்புகளுடன் உயிர் பிழைத்திருக்கிறார். இவ்விரு வழக்குகளிலும், பழிவாங்கும் நோக்கில் குற்றவாளி செயல்பட்டிருப்பது நிரூபணம் ஆனதால், வாங் யுன்-க்கு மரணதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.