நியூயார்க்: ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் யு.எஸ்.ஏ. என்ற அமெரிக்க மனித உரிமை அமைப்பிற்கு, தனக்கு சொந்தமான கட்டடத்தில் வாடகைக்கு இடம்தர மறுத்துவிட்டது சீன கப்பல் நிறுவனமான கோஸ்கோ ஷிப்பிங்.

சீனாவில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான பல விஷயங்களை அந்த அமைப்பு வெளியிட்டதனாலேயே, இந்த பதில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நியூயார்க் நகரின் மன்ஹாட்டன் பகுதியில் தனக்கான ஒரு புதிய தலைமை அலுவலகத்தை தேடிய அந்த மனித உரிமை அமைப்பு, தனக்குப் பொருத்தமான இடமாக கண்டடைந்தது சீன நிறுவனத்திற்கு சொந்தமான கட்டடத்தை.

எனவே, எல்லாம் முடிந்து ஒப்பந்தம் கையெழுத்தாகும் நேரத்தில், சீன நிறுவனம் அந்த இடத்தை வாடகைக்கு தர மறுத்துவிட்டது. அந்த மனித உரிமை அமைப்பு தனக்குப் பொருத்தமான வாடகைதாரர் கிடையாது என்று சீன நிறுவனம் தெரிவித்துள்ளது. பதிலுக்கு, நாங்களும் அந்த இடத்தில் வாடகைதாரராக இருக்க விரும்பவில்லை என்று மனித உரிமை அமைப்பு கூறியுள்ளது.

சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில், பொருளாதார சிக்கல்கள் நீடித்துவரும் நிலையில், அமெரிக்காவில் அதிகாரத்தை செலுத்தும் சீனாவின் இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.