இந்தியாவின் வடக்கே உள்ள உத்தரக்காண்ட் மாநில எல்லையில் 350 கிலோமீட்டர் தூரம் சீன எல்லை உள்ளது.
கடந்தக் காலங்களில் , இங்குள்ள எல்லைக்குள் சீன ராணுவத்தினர் பலமுறை ஊடுருவிஆக்கிரமித்துள்ளனர். குறிப்பாக, சமோலி மாவட்டத்தில் உள்ள ரிம்கிம் மற்றும் பரஹோடி யில் உள்ள எல்லைப்பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி ஊடுருவியுள்ளது. சமோலி மாவட்ட எல்லையில் ஊடுருவி அங்குள்ள பாறைகளில் “சீனா” என்று எழுதியுள்ளனர். சமீபத்தில் 2013 மற்றும் 2014ம் ஆண்டுகளில் ஊடுருவல் நிகழ்ந்துள்ளது. எனவே இந்தப் பகுதி ஊடுருவலுக்கு வாய்ப்புள்ள மிகவும் பதட்டமான பகுதியாக விளங்குகின்றது.
இந்நிலையில், கடந்த வாரம், ஜூலை 19 அன்று சீன ராணுவத்தினர் இந்திய எல்லையில் ஊடுருவ முயன்றதால், கிட்டதட்ட ஒரு மணிநேர துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. அதனை அடுத்து இரு தரப்பும் பின்வாங்கிவிட்டன.
இன்று, இந்தத் தகவலை உத்தரகாண்ட் முதல்வர் ராவத் உறுதி செய்துள்ளார்.
பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த ராவத், ” இந்தியா -சீனா இருவரும் சொந்தம் கொண்டாடும் பகுதியான 30 சதுரக் கிலோமீட்டர் பகுதியில் உள்ள மேய்ச்சல் நிலப்பரப்பில் இந்த அத்துமீறிய ஊடுருவல் நடந்தது. இதுகுறித்து மத்திய அரசுக்குத் தகவல் தெரிவித்துள்ளோம். அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகின்றோம்.” என்றார்.