வாஷிங்டன்
சீன அரசுடன் தொடர்புடைய சில ஹேக்கர்கள் அமெரிக்க மருந்து நிறுவனமான மாடர்னா நிறுவன ஆய்வு விவரங்களைத் திருட முயன்றுள்ளதாகா புகார் எழுந்துள்ளது.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா,சீனா, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் மும்முரமாக பணியில் இறங்கி உள்ளன. இந்த முயற்சியில் இங்கிலாந்து முன்னணியிலும் அடுத்து அமெரிக்கா, ரஷ்யா சீனா போன்ற நாடுகளும் உள்ளன. இந்த தடுப்பூசியை முதலில் கண்டுபிடிக்கப் பல நாடுகள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இங்கிலாந்து நாட்டின் தடுப்பூசி விவரங்களை ரஷ்ய ஹேக்கர்கள் திருட முயன்றதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் ரஷ்யா இதை மறுத்தது. நேற்று கொரோனா தடுப்பூசி கண்டு பிடித்து வரும் அமெரிக்காவின் மாடர்னா மருந்து நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி ஆய்வுகளின் விவரங்களை சீனர்கள் திருட முயன்றதாக குற்றச்சாட்டு கிளம்பி உள்ளது.
கடந்த வாரம் சீன அரசாங்கத்தின் உளவுத் துறையின் ஹேக்கர்கள் அமெரிக்காவின் பல வணிக நிறுவனங்கள், அரசு மற்றும் தனியாரின் கணினி அமைப்புக்களை ஹேக் செய்து அதில் உள்ள தகவல்களைத் திருடுவதாக எஃப் பி ஐ துணை இயக்குநர் டேவிட் போடிச் தெரிவித்திருந்தார். மேலும் அவர் சீன ஹேக்கர்கள் அமெரிக்காவை மட்டுமின்றி பல உலக நாடுகளிலும் இது போல நடவடிக்கையில் ஈடுபடுவதாகக் கூறினார்
அமெரிகான்வின் புகழ் பெற்ற மருந்து நிறுவனமான மாடர்னா நிறுவனம் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதில் முன்னணியில் உள்ளது. இந்த நிறுவனத்தின் ஆய்வு விவரங்களைச் சீன அரசுடன் தொடர்புள்ள ஹேக்கர்கள் திருட குறி வைத்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சக அதிகாரி தெரிவித்துள்ளார். இதற்கு நேற்று சீன அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.