பிஜிங்:
சீனாவின் சென்ஷேன் மாநிலத்தில் பூனை மற்றும் நாயை போன்ற மாமிச உணவுகளைச் சாப்பிடத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பரவல் ஓய்ந்துள்ள நிலையில் மக்கள் மீண்டும், மாமிசங்களைத் தேடி மார்க்கெட்டை முற்றுகையிட்ட நிலையில், அரசு திடீரென தடை போட்டுள்ளது.
இந்த உத்தரவு காரணமாக, நாய் மற்றும் பூனை இறைச்சி விற்பனை மற்றும் நுகர்வு தடைசெய்த முதல் சீன நகரமாக சென்ஷேன் திகழ்கிறது.
கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் வுகான் மாகாணத்தின் மாமிசச் சந்தையில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இன்று உலக நாடுகளையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசின் கோரத் தாக்குதலுக்கு இன்றுவரை 47,249 பேர் மரணமடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், கொரேனா வைரஸ் தாக்கம், சீனாவில் இருந்து முற்றிலுமாக விலகி உள்ளது. இதையடுத்து, அங்கு ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில், மீண்டும் பழையபடி மாமிசச்சந்தைகள் திறக்கப்பட்டு உள்ளன. மக்களும் மீண்டும் சந்தையில் குவிந்து நாய், பூனை, வவ்வால், பாம்பு போன்ற மாமிச உணவுகளை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதையறிந்த அரசாங்கம், சீனாவின் சென்ஷேன் மாகாணத்தில் பூனை மற்றும் நாயைச் சாப்பிடத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து சென்ஷேன் மாகாண அரசு வெளியிட்ட உத்தரவில், ‘நாய் மற்றும் பூனை ஆகிய இரண்டும்தான் மற்ற விலங்குகளை விட மனிதனிடம் நெருக்கமாகப் பழகுகின்றன. எனவே அதன்மூலம் நோய் பரவலைத் தடுக்க இந்தத் தடை அவசியமாகிறது என்றும், இந்த தடை மே மாதம் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவித்து உள்ளது.