புதுடெல்லி: ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி(ஏஐஐபி) மற்றும் சீன மக்கள் வங்கி(பிபிஓசி) உள்ளிட்ட 16 சீன நிறுவனங்கள், வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்களாக(எஃப்பிஐ) இந்தியாவில் பதிவுசெய்துள்ளன.
இதில் ஏஐஐபி என்பது பலதரப்பு மேம்பாட்டு வங்கியாகும். பிபிஓசி என்பது சீன மத்திய வங்கி. மற்றொரு நிறுவனமான தேசிய சமூகப் பாதுகாப்பு நிதியம்(என்எஸ்எஸ்எஃப்) அரசு நடத்தும் முதலீட்டு நிதியமாகும்.
எஃப்பிஐ பதிவுசெய்தல் என்பது நீண்டகால பயனளிக்கும் ஒருமுறை பதிவுசெயல்பாடாகும். இத்தகைய சீன நிறுவனங்கள், இந்திய மூலதனச் சந்தைகளில் முதலீடு செய்வதற்காக நீண்ட ஆண்டுகளாகவே பதிவுசெய்து வருகின்றன.
ஆனால், எஃப்பிஐ பதிவு என்பது வாழ்நாள் முழுமைக்கான ஒருமுறை செயல்பாடு அல்ல என்றும், ஒவ்வொரு நிறுவனமும் அவற்றின் செயல்பாட்டுத் தன்மைக்கேற்ப, ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் கட்டணம் செலுத்துகின்றன என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உதாரணமாக, பிபிஓசி, கடந்த 2011ம் ஆண்டு மே 4ம் தேதி வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளராகப் பதிவு செய்தது. அதன் பதிவு, ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டணம் செலுத்துவதன் வாயிலாக தொடர்கிறது.