டில்லி:

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி, தங்கள் நாட்டு தூதரை சந்தித்ததாக சீனா தெரிவித்துள்ளது. ஆனால் இதை காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது.

இந்தியாவின் சிக்கிம் மாநிலம், பூடான் நாட்டின் டோகாலம், சீனாவின் டோங்லாங் ஆகிய பகுதிகள் ஒரு முனையில் சந்திக்கின்றன.  இங்கு சீனாவுக்கும், பூடானுக்கும் இடையே எல்லை  பிரச்சினை இருக்கிறது.

பூடான் நாடு இந்தியாவின் வெளியுறவு கொள்கையை ஏற்கும் நாடு. அந்த நாடு, சீனா உட்பட எந்த நாட்டுடனும் தனி ராஜீய உறவுகள் வைத்துக்கொள்வதில்லை. பூடான் நாட்டின் பாதுகாப்பையும் இந்தியாதான் கவனித்துக்கொள்கிறது.

இந்த நிலையில்  பூடானை ஆக்கிரமிக்கும் வகையில், சீன ராணுவத்தினர் அப்பகுதியில் சாலை அமைத்து வருகிறார்கள்.  இது இந்தியாவை ஆத்திரப்படுத்தியது.

தவிர ஒரு மாதத்துக்கு முன்பு, இந்தியாவின்  சிக்கிம் மாநிலத்துக்குள்  சீன ராணுவத்தினர் புகுந்து, இந்திய ராணுவத்தின் 2 பதுங்கு குழிகளை அழித்தனர்.

இதனால் அங்கு ராணுவத்தை இந்தியா குவித்து உள்ளது. சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய ராணுவ வீரர்கள் அங்கே குவிக்கப்பட்டு உள்ளனர். இதேபோல் சீன ராணுவமும் படையை குவித்துள்ளது.

இந்த இரு காரணங்களாலும்  இந்தியா – சீனா இடையே போர்ப்பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த 7-ம் தேதி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சீன விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி அமைதியாக இருப்பது ஏன் என்று என கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கிடையே சீன தூதரம்  நேற்று (9-ம் தேதி) வெளியிட்ட அறிவிப்பில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும், இந்தியாவிற்கான சீன தூதர் லூ சவோஹூய்யும் சந்தித்து பேசியதாகவும்  இந்தியா – சீனா இப்போதைய உறவுகள் குறித்து இருவரும் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதே நேரம் சீன தூதரகம் செய்தி வெளியிட்டு உள்ள இந்த அறிக்கையை  காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது.