டில்லி

டில்லி வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள தகவலின் படி, உ.பி. மற்றும் பீகாரில் மின்னல் தாக்கி 19 பேர் இறந்ததாகவும், அசாம் வெள்ள மரணங்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்ததாகவும் தெரிகிறது.

வட மாநிலங்களில் நடந்த இயற்கை பேரிடர் பற்றி நேற்று டில்லி வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள தகவல் பின் வருமாறு :

தலைநகர் டில்லியின் நேற்று கடும் வெயில் கொளுத்தி மக்களை வாட்டி எடுத்தது.  அதிகபட்ச வெப்பம் 38.5 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்த பட்ச வெப்பம் 29.6 டிகிரியாகவும் காணப்பட்டது.  வழக்கமான வெப்பத்தை விட இது 2 டிகிரி அதிகம்.  ஈரப்பதம் அதிகபட்சம் 87% இருந்தது.

அசாம் மாநிலத்தில் வெள்ளப் பெருக்கு இன்னும் குறையவில்லை. 1096 கிராமங்கள் இன்னும் தண்ணீரில் மூழ்கி உள்ளன.  41200 ஹெக்டேர் பரப்பு நிலத்தில் உள்ள பயிர்கள் அடியோடு அழிந்து போயின.  வெள்ளத்தினால் ஏற்பட்ட மரணமடைந்தோர் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.

பீகாரில் ஏழு மாவட்டங்களில் நேற்று மின்னல் தாக்கி 16 பேர் உயிரிழந்தனர்.  இருவர் காயமடைந்தனர்.  மாநிலத்தின் வடக்கு பகுதியில் கடும் மழை பெய்தது.  சில இடங்களில் லேசான மழை இருந்தது.  பாட்னாவில் அதிகமாக 48 மி மீ அளவுக்கு மழை பெய்துள்ளது.  பகல்பூர், மற்றும் கயாவில் குறைந்த அளவு மழை பெய்துள்ளது.

உத்திரப் பிரதேசத்தில் கடும் மழையின் காரணமாக பல ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.  காக்ரா மற்றும் ஷர்தா ஆறுகளில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் உள்ளது.   மழை பிங்கா நகரில் 75 மிமீ, அயோத்யா வில் 55 மிமீ, பான்சியில் 41.4 மிமீ, பாலீக்கலானில் 23.8மிமீ அளவில் பதிவாகியுள்ளது.  பாலியா மாவட்டத்தில் மின்னல் தாக்கி மூவர் மரணம் அடைந்தனர்.

ராஜஸ்தான் மாநிலங்களில் சில இடங்களில் மழை பெய்துள்ளது.  மற்ற இடங்களில் கடும் வெய்யில் அடிக்கிறது.

ஹிமாசல பிரதேசத்தில் வெகு சில இடங்களில் மட்டும் மழை பெய்துள்ளது.  பல இடங்களில் வெறும் தூறல் மட்டுமே காணப்பட்டது.

பஞ்சாப், அரியானா மாநிலங்களிலும் மழை இல்லை.

இவ்வாறு அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது