மும்பை
இந்திய வாகன நிறுவனங்களை பின் தள்ளி விட்டு சீன நிறுவனத்துக்கு மின்சார பஸ் டெண்டர் கிடைத்துள்ளது.
மாசுக்கட்டுப்பாடு காரணமாக தற்போது மின்சார வாகனங்கள் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு உத்தேசித்துள்ளது. சமீபத்தில் மும்பையில் மின்சார பஸ் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இது போல் பல மாநில போக்குவரத்துக் கழகங்களும் மின்சார பஸ் சேவை ஆரம்பிப்பதற்காக பஸ்களை வாங்க திட்டமிட்டுள்ளன. அதன் முதல் கட்டமாக மும்பைக்கு இன்னும் ஆறு பஸ்கள் வாங்க பெஸ்ட் என்னும் அரசு நிறுவனமும் 25 மின்சார பஸ்கள் வாங்க இமாசல் சாலை போக்குவரத்துக் கழகமும் சர்வதேச டெண்டர் ஒன்றை கோரி இருந்தன.
இதில் இந்திய நிறுவனங்களான அசோக் லேலண்ட் மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகியவை கலந்துக் கொண்டிருந்தன. ஆயினும் அந்த டெண்டர் சீன நிறுவனமான பைட் ஆட்டோ இண்டஸ்ட்ரீக்கு கிடைத்துள்ளது. இந்த நிறுவனம் சீனாவில் உள்ள ஷான்க்ஸி நகரில் அமைந்துள்ளது. இந்த நிறுவனம் வழங்கும் ஒவ்வொரு பஸ்ஸும் சுமார் ரூ.2 கோடி விலையில் அமைந்துள்ளது. 9 மீட்டர் நீளமுள்ள இந்த பஸ்ஸில் 25 பேர் அமர முடியும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 230 கிமீ தூரம் ஓடக்கூடிய இந்த பஸ்கள் மணிக்கு 90 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டவை.
இமாசல் சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் இந்த டெண்டர் பெற விரும்பிய இந்திய நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ் நிறுவன மேலாளர், “கடந்த ஆகஸ்ட் மாதம் நாங்கள் எங்கள் டெண்டரை சமர்ப்பித்தோம். இது இந்திய நிறுவனங்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தோம். ஆனால் வெகு நாட்களாக இது குறித்து தகவல் வராத நிலையில் தற்போது ஒரு சீன நிறுவனம் இந்த வாகனங்களை வழங்கப் போவதாக செய்திகள் வந்துள்ளன.” என தெரிவித்தார்.
இந்த சீன நிறுவனம் இது போல மின்சார பஸ் வழங்குதலுக்கான டெண்டரை சத்திஸ்கர், பெங்களூரு, பூனே மற்றும் டில்லி ஆகிய போக்குவரத்துக் கழகங்களுக்கும் அளித்துள்ளன. அதே போல் இந்திய நிறுவனங்களும் இந்த கழகங்களுக்கு டெண்டர் அளித்துள்ளன. இன்னும் இது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தெரிய வந்துள்ளது.