சென்னை:
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில்வ இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை தூண்டியதும், போராட்டக்காரர்களுக்கு நிதியுதவி வழங்குவதும் சீன நிறுவனம் என்று வேதாந்தா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் புதிய குற்றச்சாட்டை தெரிவித்து உள்ளார்.
உயிர்க்கொல்லி நோய்களை உருவாக்கி வந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்த நிலையில், அது வன்முறையாக மாறி, காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 அப்பாவிகள் உயிரிழந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்தது.
இதைத்தொடர்ந்து ஆலையை திறக்க அனுமதிக்க கோரி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகமான வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கில் நடைபெற்ற கடந்த கால விசாரணைகளின்போது, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்று நீதிபதிகள் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், கடந்த விசாரணையின் போது, ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக சில தொழிலாளர்களும், எதிராக சிலரும் மனுதாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை தள்ளுபடி செய்த நீதிமன்றம், வழக்கின் விசாரணையை 27ந்தேதிக்கு ஒத்தி வைத்தது. அதன்படி வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின்போது ஸ்டெர்லைட் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அரிமா சுந்தரம், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை தூண்டியதும், போராட்டக்காரர்களுக்கு நிதியுதவி வழங்கு வதும் சீன நிறுவனம் என்று புதிய குற்றச்சாட்டை தெரிவித்து உள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு ஏற்கனவே அரசிடம் அனுமதி வாங்கி இருந்தாலும், மக்கள் போரட்டம் மற்றும் துப்பாக்கி சூடு காரணமாக ஆலை மூடப்பட்டதாகவும், ஸ்டெர் லைட்டுக்கு எதிரான தூத்துக்குடி போராட்டத்தில் 20,000 பேர் திரண்டது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ள வேதாந்தா நிறுவனம், ஒரு சிலரின் அரசியல் நோக்கம் மற்றும் சில தொண்டு நிறுவனங்களால் போராட்டம் திட்டமிட்டு நடத்தப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார்.
மேலும், மூடப்பட்ட ஆலையை பராமரிக்க அரசு அனுமதி மறுப்பதோடு அரசும் சரியாக பராமரிக் காததால் அமிலங்கள் வெளியேறி கட்டிடங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து, வழக்கு விசாரணையை நீதிபதிகள் நாளைக்கு ஒத்திவைத்தனர்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில், வேதாந்தா திசை திருப்பும் நோக்கில் சீன நிறுவனம் பின்னணியில் இருப்பதாக குற்றம் சாட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.