பீஜிங்

டந்த மாதம் 15 ஆம் தேதி செவ்வாய்க் கிரகத்தில் இறங்கிய சீன விண்கலம் அனுப்பிய புகைப்படங்களைச் சீன அரசு வெளியிட்டுள்ளது.

பல உலக வல்லரசு நாடுகள் விண்வெளியிலும் தங்களின் ஆதிக்கத்தை நிலை நிறுத்த நெடுங்காலமாக முயற்சி செய்து வருகின்றன.   அவ்வகையில் முதலில் நிலாவில் ஆய்வுகள் நடத்திய நாடுகள் தற்போது செவ்வாயில் கவனத்தைத் திருப்பி உள்ளன.   இந்த நாடுகளில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா போன்ற நாடுகள் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

அந்த வரிசையில் செவ்வாய் கிரகத்துக்குக் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சீனா தனது தியான்வென் 1 என்னும் விண்கலத்தை அனுப்பியது.  அது பிப்ரவரி மாதம் செவ்வாய்க் கிரக சுற்றுவட்டபாதைக்குள் நுழைந்தது.   இந்த விண்கலத்துடன் 6 சக்கரங்களை கொண்ட ரோவர் ஒன்று இணைக்கப்பட்டிருந்தது.  விண்கலத்தின் மொத்த எடை 240 கிலோ ஆகும்.

கடந்த மாதம் 15 ஆம் தேதி அன்று இந்த விண்கலம் ரோவருடன் வெற்றிகரமாகச் செவ்வாய்க் கிரகத்தில் தரை இறங்கியது.  ரோவர் விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள கருவிகளின் உதவியுடன் கிரகத்தின் பாறை தன்மைகள், நீர் ஆகியன குறித்து ஆய்வு செய்து வருகிறது.  இந்த ரோவர் அனுப்பிய புகைப்படங்களைச் சீன அரசு இன்று  வெளியிட்டுள்ளது.