உலகின் பல சிறிய நாடுகளுக்கு பெரிய தொகையை கடனாகக் கொடுத்து, அதன்மூலம் அந்த நாடுகளை சிறிதுசிறிதாக தனது காலனியாக்கும் முயற்சியில் சீன அரசாங்கம் பல்லாண்டுகளாகவே ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது; உலகின் வல்லரசு நாடாகும் முயற்சியில் சீனா வேகமாக ஈடுபட்டு வருகிறது. அதன் விளைவாக, உலகெங்கிலும் தனது ராணுவ மற்றும் வணிக ஆதிக்கத்தை விரிவுபடுத்தும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
சீனாவிடம் பெரும் தொகையை கடனாகப் பெற்ற நாடுகள், அந்தத் தொகையை உரிய காலத்தில் திரும்ப செலுத்த முடியாமல், சீனாவின் நெருக்கடிக்குப் பணிந்து தனது நாட்டில் ஒரு ராணுவ தளத்தையோ அல்லது துறைமுகம் உள்ளிட்ட வேறு பொருளாதார மண்டலங்களையோ அமைப்பதற்கு அனுமதி கொடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றன.
தற்போதைய நிலவரப்படி, மான்டிநீக்ரோ நாட்டிற்கு 865 மில்லியன் பவுண்டுகளும், டிஜிபெளட்டி நாட்டிற்கு 1.1 பில்லியன் பவுண்டுகளும், கிர்கிசிஸ்தானுக்கு 1.2 பில்லியன் பவுண்டுகளும், பப்புவா நியூ கினியா நாட்டிற்கு 498 மில்லியனும் பவுண்டுகளும், சமோவா நாட்டிற்கு 181 மில்லியன் பவுண்டுகளும், பாகிஸ்தானுக்கு 41 பில்லியன் பவுண்டுகளும், மாலத்தீவுகளுக்கு 968 மில்லியன் பவுண்டுகளும், லாவோஸ் நாட்டிற்கு 838 மில்லியன் பவுண்டுகளும், ஃபிஜி நாட்டிற்கு 496 மில்லியன் பவுண்டுகளும் கடனாக வழங்கி, அந்த நாடுகளை தனது வலைக்குள் வீழ்த்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.