பீஜிங்
சீன நாட்டின் முன்னாள் பிரதமர் லீ பெங் நேற்று மரணம் அடைந்தார்.
சீனா நாட்டின் நான்காம் பிரதமரான லீ பெங் கடந்த 1987 ஆம் வருடம் முதல் 1988 ஆம் வருடம் வரை பதவி வகித்தார். இவரது ஆட்சிக்காலத்தில் ஜனநாயக மாற்றம் கோரி மாணவர் மற்றும் தொழிலாளர்கள் மாபெரும் போராட்டங்கள் நடத்தினர். இது உலகின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்த நிகழ்வாகும்.
சீனாவின் தலைநகர் பீஜிங்கில் உள்ள தியான்மென் சதுக்கத்தில் இந்த போராட்டம் நடைபெற்றது. கடந்த 1989 ஆம் ஆண்டில் நடந்த இந்த மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் போராட்டத்தை ஒடுக்க லீ பெங் தலைமையிலான அரசு கடும் அடக்குமுறை நடவடிக்கைகள் எடுத்தது.
இந்த நடவடிக்கைகளால் ஏராளமானோர் உயிரிழந்தனர். உலக மக்களை அதிர வைத்த இந்த நடவடிக்கைகளில் லீ பெங் முக்கிய பங்கு வகித்ததாக அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. இவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தார்.
தற்போது சுமார் 90 வயது ஆகும் லீ பெங் மூப்பின் காரணமாக நோய் வாய்ப்பட்டார். அவர் நேற்று மரணம் அடைந்துள்ளார். லீ பெங் மரணச் செய்தியைச் சீன அரசின் செய்தி நிறுவனமான ஜின்ஹுவா நிறுவனம் தெரிவித்துள்ளது.