பீஜிங்

சீனாவில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்ததும் அதை உலகப் பொதுச் சொத்தாக்குவோம் என அதிபர் ஜீ ஜின்பிங் அறிவித்துள்ளார்.

கொரோனா தொற்று முதல் முதலில் சீனாவில் உள்ள வுகான் நகரில் கண்டறியப்பட்டது.  அங்கிருந்து தொற்று சீனா முழுவதும் பரவி தற்போது உலக நாடுகளைக் கடுமையாக அச்சுறுத்தி வருகிறது.   இந்த வைரஸ் தொற்றுக்கு சீனா தான் காரணம் எனவும் இந்த வைரஸ் மனிதர்களால் உருவாக்கப்பட்டது எனவும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த வைரஸ் பரவாமல் தடுக்கும் தடுப்பூசி மற்றும் தாக்கியோருக்கான மருந்துகள் என எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.  சமூக இடைவெளி, முகக் கவசம், கிருமி நாசினி,  ஊரடங்கு எனப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் இந்த தொற்று வேகமாகப் பரவி வருகிறது.   ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தடுப்பூசி கண்டு பிடிக்கப்பட்டு சோதனைகள் நடந்து வருகின்றன.

உலக சுகாதார அமைப்பின் கூட்டத்தில் காணொளி காட்சி மூலம் சீன அதிபர் ஜீ ஜின்பிங் கலந்துக் கொண்டார்.  அவர் தனது உரையில் ”கொரோனா தொற்று குறித்த பிரச்சினைகள் முழுமையாக முடிவடைந்த பிறகு அது குறித்த மதிப்பீட்டுக்குச் சீனா முழு ஒத்துழைப்பு வழங்கும்.   கொரோனா பரவாமல் தடுக்க தடுப்பூசியைக் கண்டு பிடிப்பதில் சீனா தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசியை விரைவில் சீனா கண்டுபிடிக்கும் அவ்வாறு கண்டுபிடித்த பிறகு தடுப்பூசியை நாங்கள் உலகப் பொதுச் சொத்தாக்க முடிவு செய்துள்ளோம்.  இதனால் வளரும் நாடுகளில் இந்த தடுப்பூசி எளிமையாகவும் மலிவாகவும் கிடைக்கும்.  இதற்கான பங்களிப்பை சீனா உறுதி செய்கிறது” என அறிவித்தார்.