பெய்ஜிங்: 40 ஆண்டுகளில் முதல் முறையாக நிலாவில் இருந்து பாறைகளை கொண்டு வந்து ஆராய்ச்சி செய்யும் திட்டங்களில் இறங்கி இருக்கிறது சீனா.
கடந்த 40 ஆண்டுகளில் சீனா மேற்கொள்ளும் முதல் முயற்சியாகும் இது. அதற்காக ஆளில்லா விண்கலத்தை அனுப்பும் முயற்சிகளில் சீனா உள்ளது. தெற்கு தீவு மாகாணமான ஹைனானில் உள்ள வென்சாங் விண்வெளி மையத்திலிருந்து இந்த விண்கலம் புறப்பட உள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் கூறி உள்ளது.
2017ம் ஆண்டு இந்த திட்டத்தை செயல்படுத்த சீனா முயற்சி எடுத்தது. ஆனால், அப்போது ஏவுகணை ராக்கெட்டில் இயந்திரம் செயலிழந்ததால் அந்த பணி தாமதமாகியது.
முன்னதாக, இந்த பணிக்காக 1976ம் ஆண்டு சோவித் யூனியனால் லூனா 24 என்ற விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. சீனாவின் தற்போதைய திட்டம் வெற்றி பெற்றால் அமெரிக்கா, ரஷ்யாவுக்கு பின்னர் நிலாவில் உள்ள பாறைகளை ஆராய்ச்சி செய்யும் 3வது நாடு என்ற பெருமை சீனாவுக்கு கிடைக்கும்.
இப்போது இந்த ஆய்வு வெற்றிகரமாக தொடங்கப்பட்டால் நவம்பர் பிற்பகுதியில் நிலாவில் தரையிறங்கி பொருட்களை சேகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.