குவாங்சோ :
சீனாவின் குட்டி ஆப்ரிக்கா என்று அழைக்கப்படும் தெற்கு சீன நகரமான குவாங்சோவில் உள்ள ஆபிரிக்கர்கள் கடந்த ஒரு வாரமாக, அவர்களின் வீடுகளில் இருந்து வெளியேற்றப் பட்டுவருவதையும், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் அனுமதி மறுக்கப்படுவதையும், தெருக்களில் தூங்க வேண்டிய கட்டாயத்தையும் காட்டும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
கொரோனா வைரஸ் சீனாவில் மீண்டும் பரவுவதைத் தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக அரங்கேறிவரும் இது போன்ற சம்பவங்கள் சீனா மற்றும் ஆபிரிக்க நாடுகளுக்கு இடையிலான உறவில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த காட்சிகள் ஆப்பிரிக்கா முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது, இதில் நைஜீரியா மற்றும் கானாவில் உள்ள சீன தூதர்கள் இரு நாட்டு அதிகாரிகளால் வரவழைக்கப்பட்டு கண்டனம் தெரிவித்தனர். சீனாவில் உள்ள ஆப்பிரிக்க தூதர்கள் சீன வெளியுறவு அமைச்சருக்கு தங்கள் குடிமக்கள் எதிர்கொள்ளும் வகுப்பு மற்றும் நிரவாத பாகுபாட்டை குறித்து வருத்தம் தெரிவித்து கடிதம் எழுதினர்.
“ஆப்பிரிக்க சகோதரர்களுக்கு எதிராக சீனாவில் எந்தவிதமான பாகுபாடும் இல்லை” என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் திங்களன்று தெரிவித்தார். ஆபிரிக்காவுடனான சீனாவின் உறவை சீர்குலைக்க அமெரிக்கா இந்த பிரச்சினையை பயன்படுத்த முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
ஆப்ரிக்கர்களை வைத்த வேலைவாங்கி கொழுத்த சீனா தற்போது அவர்களை நிறவாத அடிப்படையில் அடையாளப்படுத்துவது சமூக வலைத்தளங்களில் விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறது. பல்வேறு ஆப்ரிக்க நாடுகளில், முதலீடு செய்திருக்கும் சீனா தங்கள் நாட்டில் இருந்து வெளியேற வேண்டும் என்று கென்யா, நைஜீரியா, கானா போன்ற நாட்டு மக்கள் கூறிவருகின்றனர்.
சீன அரசோ, கொரோனா வைரஸ் மீண்டும் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இவர்களை தனிமைப்படுத்தி இருக்கிறோம் என்று காரணம் கூறிவருகிறது.
வீடியோ உதவி : TRT World