பீஜிங்
எதியோப்பிய விமான விபத்தை தொடர்ந்து சீனா தனது நாட்டில் உள்ள அனைத்து போயிங் 737 மாக்ஸ் 8 ரக விமானங்கள் பறக்க இடைக்கால தடை விதித்துள்ளது.
அமெரிக்க தயாரிப்பான போயிங் 737 மாக்ஸ் ரக விமானங்கள் பெருமளவில் சீனாவில் உள்ளன. இந்நிறுவனம் சீனா விமான நிறுவனங்களுக்கு இதுவரை 76 விமானங்களை விற்றுள்ளது. அத்துடன் வரும் ஜனவரிக்குள் இன்னும் 104 விமானங்கள் விற்பனை செய்ய உள்ளது.
போயிங் மற்றும் கமர்சியல் ஏர்கிராஃப்ட் கார்பரேஷன் ஆஃப் சீனா ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து இந்த விமானங்களை அளித்துள்ளன. அதில் கடந்த ஜனவர் மாதம் போயிங் 737 மாக்ஸ் 8 ரக விமானங்கள் சீனாவுக்கு விற்பனை செய்யபட்டுள்ளது. இவை வாஷிங்டனில் தயாரிக்கப்பட்டு சீனாவில் உள் அமைப்பு செய்யப்பட்டதாகும்.
.நேற்று எதியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து கென்யா சென்ற போயிங் 737 மாக்ஸ் 8 விமானம் விபத்துக்குள்ளாகி அதில் இருந்த 157 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். அதில் 8 பேர் சீன நாட்டினர். கடந்த அக்டோபர் மாதம் இந்தோநேசிய தலைநகர் ஜாகர்தாவில் இருந்து சென்ற இதே ரக விமானம் விபத்துக்குள்ளாகி விமானத்தில் இருந்த 189 பேரும் கொல்லப்பட்டனர்.
இன்று சீன விமானத் துறை அமைச்சகம் போயிங் 737 மாக்ஸ் 8 ரக விமான சேவை அனைத்தையும் இடைக்கால ரத்து செய்துள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தோநேசியா மற்றும் எதியோப்பியாவில் இதே ரக விமானங்கள் விபத்துக்குள்ளானதை அடுத்து இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில் இது குறித்து அமெரிக்காவிடம் போயிங் விமானத்தின் பாதுகாப்பு குறித்து விளக்கம் கேட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் விமான பாதுகாப்பு குறித்த விளக்கம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு உத்திரவாதம் அளித்த பிறகே இந்த தடை நீக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.