பீஜிங்
பாகிஸ்தான் தீவிரவாதிகளை அமெரிக்கப் பணத்தில் வளர்த்து அமெரிக்காவை ஏமாற்றி விட்டதாக ட்ரம்ப் கூறியதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது டிவிட்டர் பதிவில் “கடந்த 15 வருடங்களாக அமெரிக்க அரசு 33 பில்லியன் டாலர் நிதி உதவி அளித்து முட்டாள் தனம் செய்துள்ளது. அதற்கு பதிலாக பாகிஸ்தான் நமது தலைவர்களை முட்டாள்கள் என நினைத்து நாம் ஆப்கானிஸ்தானில் தேடி வரும் தீவிரவாதக் குழுக்களை இந்த நிதி உதவி மூலம் வளர்த்துள்ளது. ” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கு விரைவில் பதில் அளிப்பதாக பாக் தெரிவித்திருந்தது. தற்போது சீனா ட்ரம்ப்பின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சீனா இது குறித்த தனது அறிக்கையில், “பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஒழிக்க முழு முயற்சி எடுத்து பல தியாகங்களை செய்து வருகிறது. தீவிரவாத ஒழிப்பில் பாகிஸ்தான் எடுத்து வரும் முயற்சிக்கு சர்வதேச நாடுகள் நன்றி தெரிவிக்க வேண்டும். அமெரிக்கா தெரிவிக்கும் தவறான கருத்துக்களால் சீனா – பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் நாடுகளிடையே உள்ள உறவில் எந்த ஒரு பாதிப்பும் இருக்காது. ட்ரம்பின் இந்த கருத்தை சீனா கடுமையாக எதிர்க்கிறது.” எனக் கூறி உள்ளது.