சீன தம்பதிகள் இனி மூன்று குழந்தைகளை பெற்றுக்கொள்வதற்கு அதிபர் ஜி ஜிங்பிங் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட குழு அனுமதி அளித்துள்ளது.
உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில் பிறப்பு விகிதம் குறைந்து வருவதாக இந்த ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரியவந்திருக்கிறது.
மக்கள் தொகை கணக்கெடுப்பில் வயதானவர்களின் எண்ணிக்கை ஜப்பான் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு இணையாக சீனாவில் அதிகரித்து வருவதும் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.
2020 ம் ஆண்டு மட்டும், கருவுறும் பருவத்தில் உள்ள பெண்கள் சராசரியாக 1.3 குழந்தைகள் மட்டுமே பெற்றுக்கொண்டது தெரியவந்தது, 1950 ம் ஆண்டுக்குப் பிறகு இதுவே மிகக்குறைந்த பிறப்பு விகிதம் என்று சொல்லப்படுகிறது.
ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள இருந்த அனுமதியை 2 குழந்தைகள் என்று 2016 ம் ஆண்டு மாற்றியமைத்தபோதும் சீனர்களிடையே அதற்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்பது இந்த புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்ததை அடுத்து தற்போது இதை மூன்றாக உயர்த்தி இருக்கிறது சீன அரசு.