நியூயார்க்: காஷ்மீர் பிரச்சினையை ஐ.நா. பொதுச்சபையில் எழுப்பிய சீனா, காஷ்மீர் பிரச்சினையானது ஐ.நா. விதிமுறை, பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் மற்றும் இருதரப்பு ஒப்பந்தம் ஆகியவற்றின் அடிப்படையில், அமைதியான முறையில் தீர்க்கப்பட வேண்டுமென கூறியுள்ளது.
அதேசமயம், ஒரு தனிப்பட்ட தரப்பு ஆதிக்கம் செலுத்தும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படக்கூடாது என்றும் சீனா தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் பொது சபையில் உரையாற்றிய சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி இதை தெரிவித்தார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளுக்குமே அண்டை நாடு என்ற முறையில், காஷ்மீர் பிரச்சினை அமைதியான முறையில், ஐ.நா. அவையின் சட்டதிட்டங்களின்படி தீர்க்கப்பட வேண்டுமென்பது சீனாவின் விருப்பம் என்றும் அவர் கூறினார்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370ஐ இந்திய அரசு ரத்துசெய்தது முதல், அதற்கு எதிராக தன்னால் இயன்ற அத்தனை வகையிலும் பாகிஸ்தான் செயலாற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.