பீஜிங்
இன்று நடந்த சீனா, பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் நாட்டு முத்தரப்பு பேச்சு வார்த்தையில் தீவிரவாத அச்சுறுத்தலுக்கு எதிராக போராட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது
இன்று பீஜிங் நகரில் சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ ஒரு முத்தரப்பு பேச்சுவார்த்தை கூட்டத்தை நடத்தினார். அதில் அவருடன் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிஃப் மற்றும் ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் சலாஹுதின் ரப்பானி ஆகியோர் கலந்துக் கொண்டனர். முதன் முறையாக இவர்கள் மூவரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கூட்டம் பற்றிய அறிக்கையில், “இந்த மூன்று நாடுகளும் தீவிரவாத அச்சுறுத்தலுக்கு எதிராக போராட தீர்மானித்துள்ளன. எந்த ஒரு நாடோ அல்லது குழுவோ எக்காலத்திலும் தீவிரவாத நடவடிக்கைகளுக்காக எங்கள் நாட்டை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம். அது எங்கள் நாட்டின் எல்லப் பகுதிகளுக்கும் பொருந்தும்” என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கூட்டத்தில் இந்நாடுகளின் வளர்ச்சி, பாதுகாப்பு போன்றவை குறித்து விவாதிக்கப் பட்டதாக கூறப்படுகிறது.