மாலே: காலனியாதிக்க யுகத்தில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி கைப்பற்றிய நிலத்தைவிட, அதிகளவு நிலத்தை, இன்றைய நிலையில், சீனா கைப்பற்றியுள்ளது என்று கூறியுள்ளார் முன்னாள் மாலத்தீவு அதிபர் முகமது நஷீத்.
மாலத்தீவு தலைநகர் மாலேவில் நடைபெற்ற இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் பேசுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இந்த மாநாட்டில் இந்தியாவும் ஒரு பங்கேற்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் பேசியதாவது, “கடந்த சில ஆண்டுகளில், ஒரு குண்டுகூட வெடிக்காமல், பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி கைப்பற்றியதைவிட அதிக நிலத்தை சீனா கைப்பற்றிவிட்டது. கடந்த 5 ஆண்டுகளாக மாலத்தீவுக்கு நிறைய வெளிநாட்டு முதலீட்டு திட்டங்கள் வந்துள்ளன. அவற்றில் பெரும்பான்மையான முதலீடுகள் சீனாவின் எக்ஸிம் வங்கியினுடையது.
இப்படி குவியும் முதலீடுகளுக்கு வட்டி போன்றவை முறையாக திரும்ப செலுத்தப்பட முடியாமல் போகும்போது நாட்டின் இறையாண்மையும், இந்தியப் பெருங்கடலின் அமைதியும் காணாமல் போகும்.
மாலத்தீவுக்கு நிறைய வெளிநாட்டு முதலீடுகள் தேவைதான். ஆனால், அந்த முதலீடுகளின் நோக்கம் மற்றும் டெண்டர் செயல்பாடுகள் குறித்து வெளிப்படைத் தன்மை தேவை. முக்கியமாக சீனாவின் விஷயத்தில் இது கட்டாயம் கடைபிடிக்கப்பட வேண்டும். முதலீட்டால் நமக்கு நன்மை கிடைக்க வேண்டுமே தவிர, அது பகட்டிற்கானதாக இருக்கக்கூடாது” என்றுள்ளார்.
கடந்த 2008 முதல் 2012ம் ஆண்டுவரை மாலத்தீவின் அதிபராக பதவி வகித்தவர் முகமது நஷீத். இவர்தான் ஜனநாயக முறையில் தேர்வுசெய்யப்பட்ட அந்நாட்டின் முதல் அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.